ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் கலந்து கொண்ட பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு ஆளுநர் ரவியிடம் முன்வைத்தனர்.
நிகழ்ச்சியின்போது சேலத்தை சேர்ந்த பெற்றோர் ஒருவர் ஆளுநரிடம் நீட் தேர்வை நீங்கள் எப்போது முழுவதுமாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததாவது..
“ நீட் தேர்விற்கு நான் எப்போதும் தடை கொடுக்க மாட்டேன். இது பொது பட்டியலில் உள்ளதால் குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்யலாம்.
நீட் தேர்விற்கு அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையிலேயே இது உள்ளது. கடந்த அரசு நீட் தேர்வுக்கு 7.5 இடஒதுக்கீடு கொடுத்த பின்னர் தற்போது 600 மாணவர்கள் மருத்துவர்கள் ஆகின்றனர்.” என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு முன்னர் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் நீட் தேர்விற்கு பின்னர் எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பதை ஒப்பிட்டு பார்த்தால் நீட் தேர்விற்கு பின்னரே அதிக நபர்கள் சேர்ந்துள்ளனர்.
NEWS EDITOR : RP