அழகுக்கு ஆபத்தாகும் ‘டாட்டூக்கள்’ ~ மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

Spread the love

அன்பும் அழகும் கலந்த ‘டாட்டூ’ என்ற பச்சை குத்துதல் மூலம் உடலுக்கு தீங்கு நேராமல் இருப்பதை இளைஞர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகின் மிகப் பழமையான கலைகளில் ஒன்றாக ‘டாட்டூ’ (பச்சை குத்துதல்) கருதப்படுகிறது. ‘டாட்டூ’ கலை ஏறக்குறைய 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என உறுதியாக கூறப்படுகிறது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓட்சி பழங்குடி மக்கள் ‘டாட்டூ’ குத்திக்கொண்டதை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேகால கட்டத்தில் மங்கோலியா, சீனா, எகிப்து, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளில் ‘டாட்டூ’ குத்திக்கொள்ளும் வழக்கம் ஆண்கள், பெண்கள் மத்தியில் இருந்துள்ளது. சிறிய அளவில் தொடங்கி உடல் முழுவதும் ‘டாட்டூ’ குத்திக்கொள்ளும் நடைமுறையும் இருந்துள்ளது.

இந்தியாவில் ‘டாட்டூ’ கலாச்சாரம் பெரியளவில் இல்லை என்றாலும் சில பழங்குடி மக்கள் மத்தியில் ‘டாட்டூ’ குத்திக்கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது. கூர்மையான ஊசியால் பச்சை வண்ணத்தை தோலின் கீழ் பகுதியில் செலுத்தி விரும்பிய வடிவங்களை வரைந்து கொண்டனர். தற்போது, இளைஞர்கள் மத்தியில் ‘டாட்டூ’ கலாச்சாரம் பரவலாக அழகும், அன்பும் சார்ந்த விஷயமாக மாறி வருகிறது.

காதலிக்காக, பெற்றோருக்காக, அழகுக்காக, வெற்றியின் நினைவாக, விசேஷ நிகழ்வுகளின் நினைவாக என விதவிதமாக ‘டாட்டூ’ குத்திக் கொள்வதை பார்க்க முடிகிறது. சென்னை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களை கடந்து இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் ‘டாட்டூ’ ஸ்டூடியோக்கள் சிறு தொழிலாக மாறி வருவதை பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் நரிக்குறவர்கள் மட்டுமே ‘டாட்டூ’ குத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலை மாறி இன்று நவீன கருவிகளுடன் இளைஞர்களின் புதிய தொழிற்கூடமாக மாறி வருகிறது.

சாலையோர ஆபத்துகள்: திருவிழா கடைகள், சந்தைகள், நகர்புறங்களில் போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையோரங்களில் ‘டாட்டூ’ குத்தும் தற்காலிக ஸ்டால்கள் வைத்திருப்பதை பார்க்க முடிகிறது. குறைந்த செலவில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் விதவிதமாக ‘டாட்டூ’க்களை குத்தி அழகுபடுத்திக்கொள்கின்றனர்.

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையோரத்திலும் கடந்த சில நாட்களாக சில இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்து ‘டாட்டூ’க்களை குத்தி வருகின்றனர். இது ஆபத்தான முயற்சி என பல்வேறு தரப்பில் புகார் எழுந்துள்ளது. ஒரே ஊசியால் பலருக்கும் ‘டாட்டூ’ குத்துவதற்கு வாய்ப்பு இருப்பதால் தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் என்பதுடன், ஒவ்வாமை ஏற்பட்டு உடல் ரீதியான பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து ‘டாட்டூ’ ஸ்டூடியோ உரிமையாளரான ஜஸ்டின் கூறும்போது, ‘‘டாட்டூ ஸ்டூடியோ தொடங்க நாங்கள் முறைப்படி படித்து சான்றிதழ் பெற்று இந்த தொழிலை நடத்தி வருகிறோம். எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் ‘டாட்டூ’ எப்படி எல்லாம் போடப்படும் என்ற வீடியோவை காண்பித்த பிறகே ‘டாட்டூ’வை குத்த ஆரம்பிப்போம். நாங்கள் பயன்படுத்தும் வண்ண மைகள் உயர் தரமானது. ‘டாட்டூ’ குத்தும் ஊசி முதல் அதற்கு பயன்படுத்தும் மைகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்துவோம்.

ஒருவருக்கு ‘டாட்டூ’ குத்தும் பணி முடிந்துவிட்டால், அவருக்கு பயன்படுத்திய பொருட்களை பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் அப்புறப் படுத்துவோம். ஒரே ஊசி, ஒரே மையை வேறு, வேறு நபர்களுக்கு பயன்படுத்தவே மாட்டோம். ‘டாட்டூ’ குறித்து தெரிந்து கொண்ட பிறகே ‘டாட்டூ’ குத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.’டாட்டூ’ ஆபத்துகள் குறித்து தோல் நோய் மருத்துவர் தர்மாம்பாளிடம் கேட்டதற்கு, ‘டாட்டூக்களில் பயன்படுத்தப்படும் ரசாயன மைகளால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. இரண்டாவதாக நோய் தொற்று பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, காசநோய், பால்வினை நோய், எய்ட்ஸ் ஏற்பட வாய்ப்புள்ளது. தோலில் தழும்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ‘டாட்டூ’ குத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறும் ஜஸ்டின், ‘‘டாட்டூவால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு தோல் நோய் மருத்துவரை உடனடியாக பார்க்க வேண்டும்’’ என்றார்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram