மோடி சமூகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது எம்பி பதவி தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. இதனால், நான்கு மாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அவரை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வரவேற்று முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்ததை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் எம்பிக்கள் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்டோருக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். முன்னதாக ராகுல்காந்தி தமது டுவிட்டர் பக்கத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்பி என்பதை நீக்கி விட்டு நாடாளுமன்ற உறுப்பினர் என மாற்றம் செய்துள்ளார். இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக
மக்களவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.
முன்னதாக அவதூறு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து எம்பி பதவி பறிக்கப்பட்டதால் வீட்டை விட்டு கடந்த ஏப்ரல் மாதம் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், ராகுலுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து ராகுலுக்கு அவர் இருந்த அதே வீட்டை ஒதுக்க நாடாளுமன்ற குழு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
NEWS EDITOR : RP