தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரைத்துறையில் இயக்குநர் அட்லி அறிமுகமாகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.
ஜவான் திரைப்படம் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் ரூ.250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதன் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அண்மையில் ரூ.15 கோடி செலவில் ஷாருக்கான் அறிமுகமாகும் ‘வந்த இடம்’ என்ற பாடல் வெளியாகி வைரலானது.
படம் வெளியாக சரியாக ஒரு மாதம் இருக்கும் இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ”இன்னும் 30 நாட்கள் உள்ளன… இவையும் கடந்து போகும்….டிக்…டாக்…. ஜவான் உலகம் முழுவதும் 7 செப்டம்பர் 2023 அன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
NEWS EDITOR : RP