விசைத்தறி ~ கைத்தறி விவகாரம் : கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு..!!

Spread the love

கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் நெசவு செய்வதால் கைத்தறி நெசவாளர்கள் வேலையிழந்து நெசவுத் தொழிலை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

தமிழகத்தின் பாரம்பரியமான தொழில்களில், கைத்தறியால் நெய்யப்படும் நெகமம் கைத்தறி சேலையும் ஒன்று. புவிசார் குறியீடு பெற்று, தனித் தன்மையுடனும், தரத்தின் மூலமும் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது கைத் தறி சேலை. அதேசமயம், கைத் தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகமான பேட்டு பார்டருடன் கூடிய சேலையை, முறைகேடாக விசைத் தறியால் உற்பத்தி செய்து, விற்பனை செய்வதால் தனித் தன்மையை இழந்து நிற்கிறது கைத் தறி சேலைகள்.

தென்னை நகரமான பொள்ளாச்சி அருகில் உள்ள நெகமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பரம்பரை பரம்பரையாக கைத்தறி நெசவு மூலம் கைத்தறி சேலை உற்பத்தி செய்து வருகின்றனர். வழக்கமான சேலைகள் போல் இல்லாமல் பல்வேறு வடிவங்கள் சேலையில் இடம் பெறுவதால் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள்,வெளிநாடுகள் வரை அனுப்பிவைக்கப்பட்டன. கரோனா ஊரடங்கு, நூல்விலை ஏற்றம், விற்பனை சரிவு என அடுத்தடுத்த நெருக்கடிகளால் தற்போது கைத்தறி சேலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களை காக்க வேண்டும் என்ற நோக்கில், 11 ஜவுளி ரகங்களை கைத்தறி மூலம் மட்டுமே நெய்ய வேண்டும் என்று கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டம் வரையறுத்துள்ளது.

தமிழ்நாடு கைத்தறி ஆணையர் மூலம் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பேட்டு பார்டருடன் கூடிய சேலை, பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி,துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி,போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட், சத்தார்க் உள்ளிட்ட 11 ரகங்களை கைத்தறியில் மட்டுமே தயாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பேட்டு பார்டருடன் கூடிய சேலை கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளதால், இவற்றை விசைத்தறி மூலம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். விதிமுறை மீறி இந்த ரகங்களை உற்பத்தி செய்தாலோ, கடைகளில் விற்பனை செய்தாலோ 6 மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டம் வகை செய்துள்ளது.

எனினும், நடைமுறையில் இந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப் படுவதில்லை என்பதால், விசைத்தறியில் பேட்டு பார்டருடன் கூடிய சேலை உற்பத்தி செய்யப்பட்டு, கைத்தறி சேலை என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர் கைத்தறி நெசவாளர்கள்.

இது குறித்து குள்ளக்காபாளையம் கைத்தறி நெசவாளர்கள் கூறும்போது, “கைத்தறியில் நெசவு செய்ய வேண்டிய பேட்டு பார்டருடன் கூடிய சேலையை விசைத்தறியில் உற்பத்தி செய்வது என்பது தமிழகத்தில் பல இடங்களில் நடைபெறுகிறது. பல இடங்களில் விசைத்தறி மூலம் சேலை உற்பத்தி நடக்கிறது. அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடைபெற வாய்ப்பில்லை.

பெயரளவுக்கு ஆய்வு நடத்தி, ஆண்டுக்கு ஒரு சிலர் மீது மட்டும் வழக்குப் பதிவு, குறைந்த அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதால், விசைத்தறியில் கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்வதை நிரந்தரமாக தடுக்க முடியாத நிலை தொடர்கிறது. பாரம்பரியம் மிக்க கைத்தறி ரகங்களை பாதுகாக்க வேண்டுமானால், விசைத்தறி சேலை உற்பத்தியைத் தடுக்க அதிகாரிகள், தீவிரமாக செயல்பட வேண்டும். அபராதத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சேலைகளை பறிமுதல் செய்ய வேண்டும்” என்றனர்.

நெகமம் அடுத்த குள்ளக்காபாளையத்தை சேர்ந்த கைத்தறி நெசவாளி நந்தகுமார் கூறும்போது,‘‘மூலப்பொருட்கள் விலையேற்றம், கைத்தறி சேலைகள் தேக்கம் ஆகியவற்றால் கைத்தறி நெசவுத்தொழில் தற்போது கடுமையாக நலிவடைந்துள்ளது. இந்நிலையில், விசைத்தறியாளர்கள் கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்வதால் கைத்தறித்தொழில் முற்றிலும் அழியும் நிலைக்கு செல்கிறது.

கைத்தறியின் அழகு தனித்துவமானது. அதுவே நமது அடையாளம். கைத்தறி அழிந்தால் நமது சொந்த பாரம்பரியத்துடன் உள்ள தொடர்புகளை இழக்க நேரிடும். பாரம்பரிய கைவினை கலைஞர்களின்திறன்கள் வரும் தலைமுறைகளுக்கு கடத்தப்பட வேண்டும். கைத்தறித் தொழில் அழிந்தால் நாம் மிகவும் மதிப்புமிக்க ஒன்றை இழப்போம். எனவே, தயவு செய்து கைத்தறித்தொழிலை காப்பாற்றுங்கள்” என்றார்.

நெசவாளர்கள் பலர் தறி நெய்வதை விட்டுவிட்டு கட்டிட வேலைக்கு செல்கின்றனர். பெண்கள் காய்கறி விற்பனை செய்கின்றனர். இதேநிலை நீடித்தால் கைத்தறி தொழில் அழிந்து விடும். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்டது நெகமம் சேலைகள். ‘வெள்ளாவியில் வைத்தாலும் வெளுக்காத சேலை நெகமம் சேலை’ என்ற சொலவடையே இந்த சேலையின் தரத்தை காட்டுகிறது. கைத்தறி நெசவு என்பது பாரம்பரியமான தொழில். இது அழிந்தால், மீண்டும் கொண்டுவர முடியாது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram