இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரை, பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த பெண் ஆன்லைன் வாயிலாக திருமணம் செய்தார்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் அர்பாஸ். அவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த அமீனாவுக்கும் சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் திருமண விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மணமகன் அர்பாஸ் குடும்பத்தினருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஆன்லைனில் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.
கடந்த 2-ம் தேதி காணொலி வாயிலாக முஸ்லிம் முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றன. ராஜஸ்தானின் ஜோத்பூரில் மணமகன் அர்பாஸும் பாகிஸ்தானின் கராச்சி நகரில் மணமகள் அமீனாவும் அமர்ந்திருக்க, இருவருக்கும் ஆன்லைனில் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து மணமகன் அர்பாஸின் தந்தை முகமது கூறும்போது, “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது. எனினும் எங்களது உறவினர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். அந்த உறவு இன்றளவும் நீடிக்கிறது. தற்போது எனது மகன் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். நாங்கள் முறைப்படி விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்று எங்கள் மருமகளை இந்தியாவுக்கு அழைத்து வருவோம்” என்று தெரிவித்தார்.
மணமகள் அமீனாவின் குடும்பத்தினர் கூறும்போது, “இந்தியாவின் மேற்கு ராஜஸ்தான் பகுதியில் எங்களது உறவினர்கள் அதிகமாக உள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த பல பெண்களுக்கு மேற்கு ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்களுடன் திருமணமாகி இருக்கிறது. மணமகள் அமீனா இந்தியா செல்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார். ஆன்லைனில் சட்டப்பூர்வமாக திருமணம் நடைபெற்றிருப்பதால் இந்திய, பாகிஸ்தான் தரப்பில் எளிதில் விசா கிடைக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தனர்.
மணமகன் அர்பாஸ் கூறும்போது, “பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. அங்கு திருமணம் செய்தால் இந்தியாவில் அந்த திருமணம் செல்லாது. இந்தியாவில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இப்போது இந்தியாவில் இருந்தபடியே ஆன்லைனில் திருமணம் செய்திருப்பதால் எங்களது திருமணம் செல்லும்” என்று தெரிவித்தார்.
NEWS EDITOR : RP