தொல்லியல்துறை ஆய்வுக்கு தடை கோரிய ஞானவாபி கமிட்டியின் மனு தள்ளுபடி..!!

Spread the love

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அந்தப் பகுதியில் தொல்லியல்துறை ஆய்வு நடத்த அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 24-ந்தேதி தொல்லியல்துறை ஆய்வை தொடங்கியது. இதை எதிர்த்து ஞானவாபி கமிட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதித்ததோடு, இதுதொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டை அணுக கேட்டுக்கொண்டது. இதனால் மசூதி நிர்வாகம் சார்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் ஆய்வுக்கு தடைவிதிக்கக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, நீதி நலன் கருதி ஞானவாபி மசூதியில் அறிவியல் பூர்வமான அகழாய்வு நடத்த அவசியம் உள்ளது என தெரிவித்து, ஞானவாபி மசூதியில் அகழாய்வை தொடர்ந்து நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.மேலும் ஞானவாபி மசூதிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆய்வை மட்டுமே நடத்த வேண்டும் என்றும், அகழாய்வு நடத்தக் கூடாது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், ஆய்வு தொடர்பான அறிக்கையை அலகாபாத் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது தொல்லியல் துறை ஆய்வுக்கான உத்தரவு வழிபாட்டு உரிமை சட்டத்திற்கு எதிரானது என மசூதி கமிட்டி தரப்பில் வாதிடப்பட்டது. அதே சமயம் ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தப்படாது என இந்திய தொல்லியல் துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறையின் ஆய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு, மசூதி கமிட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram