“அரசியல் சாசன சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியில் பிரிவு 44-ல் பொது சிவில் சட்டம் நாட்டில் இயற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரு நிலை வர வேண்டும்; அதற்கு வேண்டிய சட்டங்கள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்த அன்றைய காலகட்டத்தில் நமது அரசியல் தலைவர்களால் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முடியவில்லை. ஏனென்றால், “நாட்டில் பல்வேறு சிவில் சட்டங்கள் இருக்கின்றன. இந்துக்களுக்குத் தனியாக, முஸ்லிம்களுக்குத் தனியாக, கிறிஸ்தவர்களுக்குத் தனியாக சட்டங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒரே அளவில் எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்கக்கூடிய வகையில் சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். அது மிகவும் முக்கியம்” என்று அன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில்தான் சட்டப்பிரிவு 44 கொண்டு வரப்பட்டது.
இதன் மூலமாக நமக்குத் தெரிய வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்துக்களுக்கு, முஸ்லிம்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு என்று தனித்தனி சட்டங்கள்தான் அன்றைய தேதியில் அமலில் இருந்தன என்பதை அவர்கள் அங்கீகரித்தார்கள் என்பதுதான். உடனடியாக, எல்லோருக்கும் ஒரே மாதிரி சட்டம் இருக்க வேண்டும் என்று அந்த தேதியில் முடிவு செய்யவில்லை. அந்த சமயத்தில், முடிவு செய்திருக்கவும் முடியாது. ஏனென்றால், பெரிய கலவரம் ஏற்பட்டிருக்கும். முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் எனும் தனி நாடே போகும் ஒரு நேரத்தில், இங்கு இருந்தவர்கள் எல்லாம் இந்துக்கள்தானே என்று நினைப்பது சரியல்ல.
முஸ்லிம்களுக்காக தனி நாடு கேட்டுக்கொண்டு போனவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இங்கு இருந்தவர்கள் எல்லாருமே இந்தியர்கள்தான். அவர்களில் முஸ்லிம்கள் இருந்தார்கள்; கிறிஸ்தவர்கள் இருந்தார்கள்; இந்துக்கள் இருந்தார்கள். எனவேதான், ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் தனித்தனி சட்டங்கள் இருப்பதை ஒரே சட்டமாக, எதிர்காலத்தில் அதற்கு தகுந்த சூழ்நிலை இருக்கும்போது கொண்டு வர வேண்டும் என்ற வகையில் மட்டும் பொது சிவில் சட்டம் குறித்து சொல்லி இருக்கிறார்கள்.
இந்த 2023-ல் அதற்கான சூழ்நிலை வந்துவிட்டதா என்று கேட்டால், துளிகூட வரவில்லை என்பதுதான் எனது கவலை. 1947-ல் பாகிஸ்தான் என்று ஒரு பெரிய பகுதியை இழந்து நின்ற காலம் அது. பெரும் அளவில் அதிருப்தி இருந்தது. மதத்தைச் சொல்லி தனியாக ஒரு நாட்டை பிரித்துக் கொண்டு போகும்போது, மீதம் இருந்த நாடு என்பது அகண்ட பாரதம் என்பதில் குறைந்த இடமாகவே இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் கொண்டு வரப்படக்கூடிய ஒரு சட்டம் எப்படி இருக்கவேண்டும் என்றால், அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்; அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரே நிலை, ஒரே மதிப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்படும்படியானதாக இருக்க வேண்டும். ஆனால், 1947-ல் அத்தகைய நிலை இருந்ததா என்றால் இல்லை. பெருமளவில் பாதிப்புதான் இருந்தது. ஆனால், நமக்கு இந்தியத் தன்மையை கொண்டு வர வேண்டும்; நாம் மத ரீதியாக வேறுபட்டாலும் நாமெல்லோரும் இந்தியர் என்ற ஒரு பெரிய எண்ணம் வர வேண்டும்; அந்த ஓர் அடையாளம் இருக்க வேண்டும் என்று அப்போது நினைத்தார்கள். அதற்காகத்தான் சட்டப்பிரிவு 44-ஐ கொண்டு வந்தார்கள்.
ஆனால், தற்போதைய 2023-ல் அதற்கான சூழல் வந்துவிட்டதா என்றால், அப்படி வந்துவிட்டதாக நான் கருதவில்லை. ஏனென்றால், சிறுபான்மையினரின் பார்வை இதில் மிகவும் முக்கியம். அவர்களின் பார்வை எப்படி இருக்கிறது என்று பார்க்காமல், பெரும்பான்மையினருக்கு பொது சிவில் சட்டம்தான் சரி என்று தோன்றுகிறது; எனவே, அதுதான் சரி என்று நினைப்பது மிகவும் ஆபத்தான போக்கு. அதுவும் தற்போதைய ஆட்சியில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை. சிறுபான்மையினருக்கு சரிசமமாக பாவனை செய்யப்படவில்லை. அரசாங்கத்தின் நியதிகள், அவர்கள் கொண்டு வரக்கூடிய சட்டங்கள் எல்லாமே சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதுபோல ஒரு வலுவான எண்ணம் சிறுபான்மையினர் மத்தியில் இருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் யாருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால், வலு இல்லாதவர்களுக்குத்தான் பாதுகாப்பு வேண்டும். வலுவாக இருப்பவர்களின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டிய அவசியமே இல்லை. எந்த சமுதாயத்திலும் சிறுபான்மையினர் பாதுகாப்பு என்று இருக்குமே தவிர, பெரும்பான்மையினர் பாதுகாப்பு என்று ஒரு சட்டம் இருக்காது.
‘நாட்டில் நல்ல நிலையில் இருக்கிறோம். அரசு எங்களையும் பெரும்பான்மையினரைப் போல பார்க்கிறது. எங்களின் கோட்பாடுகள்படி, வழிபாட்டு முறைப்படி, தனிப்பட்ட வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கு, மத ரீதியாக அமைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது’ என்ற ஒரு நம்பிக்கை வந்த காலமாக இருந்தால் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற முடியும். இந்த அரசு அதுபோல செய்யவே இல்லை. சிறுபான்மையினர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்; சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் எனது கணிப்பு.
நாடு சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டு காலத்தில், சிறுபான்மையினரை வெறும் சிறுபான்மையினராக மட்டுமே பார்க்கும் ஓர் அரசியல் இங்கு உள்ளது. அவர்களின் வாக்குகள் மீது மட்டுமே குறி உள்ளது. அவர்களின் வாக்குகளைப் பெற ஏதாவது சலுகை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடியதாக நமது அரசியல் இருந்திருக்கிறது. அரசியல் செய்வதற்கு சிறுபான்மையினர் அவசியம் என்று பார்த்தோமே ஒழிய, அவர்களை நாட்டின் மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வர நாம் தயாராக இருக்கிறோமா என்று பார்த்தால் எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. இந்திய அடையாளத்தை வலுப்படுத்தாமல் சாதி, மத, மொழி வாரியாக மக்களை தனித்தனியாகப் பார்த்து, அவரவர்களின் ஓட்டுக்களை வாங்க முடியுமா என்று பார்ப்பதாகத்தான் அரசியல் இருக்கிறது. இதில் அனைத்து கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. இப்படித்தான், நாட்டில் ஒருமித்த சட்டத்தை கொண்டு வர முடியாத நிலை உருவாக காரணமாக இருந்துவிட்டோம்.
அதேநேரத்தில், எனக்கு ஓர் அடிப்படை கேள்வி இருக்கிறது. தனிச்சட்டங்கள் தனித்தனியாக இருப்பதால், அரசை நடத்துவது எளிதாக இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார். தனிச்சட்டம் என்றால் என்ன என்று நாம் பார்க்க வேண்டும். நாம் எல்லோரும் இந்தியர்கள், இந்தியர் என்பதுதான் நமது அடையாளம், இங்கு எந்த மதமும் இருக்கக்கூடாது என்று சொல்ல முடியுமா என்றால் முடியாது. சில விஷயங்கள் மிகவும் தனிப்பட்டவை. மத ரீதியாக நான் வேறுபடுகிறேன் என்றால், எந்த விஷயத்தில் வேறுபடுகிறேன். வழிபாட்டு முறையில், குடும்ப அளவில் மதத்தை கட்டிக் காக்க வேண்டும் என்று நினைப்பதில் நான் வேறுபடுகிறேன். குடும்பம் என்றால், நான் எனது மனைவி. மனைவி எப்படி வருகிறாள்? திருமணம் மூலமாக வருகிறாள். இது மிகவும் தனிப்பட்ட விஷயம். நான் எப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும்? அதற்கான சடங்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் மிகவும் தனிப்பட்டவை. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
பெரும்பான்மையாக இருப்பவர்களுக்கு என்ன சட்டம் இருக்கிறதோ அதை சிறுபான்மையினர் மீது திணிக்கக்கூடிய வகையில்தான் பொது சிவில் சட்டம் இருக்கும் என்றும், பாகுபாடு இன்றி பார்க்கக்கூடிய நிலை இருக்காது என்றுமே எனக்குத் தோன்றுகிறது. பெரும்பான்மை சமூகம் நினைக்கும் விதமாக பொது சிவில் சட்டம் வருமானால் அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எப்போது நமது சமூகம் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பார்க்காமல், சட்டத்தின் நல்ல அம்சங்களைப் பார்க்கக்கூடிய பக்குவ நிலைக்கு வருகிறதோ அப்போதுதான் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். எது நல்லது என்பது இயல்பாக ஏற்பட வேண்டும். இது பெருமளவில் பேசப்பட வேண்டும்; விவாதிக்கப்பட வேண்டும். எந்த சட்டத்தில் வலு அதிகம் என்பது தெரிய வேண்டும். இஸ்லாமிய சட்டங்களில் இருக்கும் வலுவை புரிந்து கொண்டு ஏற்கக்கூடிய பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். ஆனால், அத்தகைய பக்குவமற்ற நிலைதான் தற்போது இருக்கிறது” என்று ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் கூறினார்.
NEWS EDITOR : RP