கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் நாட்டின் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததோடு, கடந்த ஓராண்டில் சில்லறை விற்பனையில் அரிசி விலை 11.5 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், இந்த எதிர்பாராத பருவகால மாற்றங்களால் கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே அரிசி விலை 3 சதவீதம் அளவு உயர்ந்தது.
இந்நிலையில், பண்டிகை காலம் வருவதால் உள்நாட்டில் அரிசிக்கான தேவையும் அதிகரிக்கும், இதனால் அரிசியின் விலை மேலும் உயரலாம் என நிபுணர்கள் எச்சரித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் அரிசி தங்கு தடையின்றி கிடைக்கவும், அதன் விலை உயர்வால் மக்கள் பாதிப்படையாமல் இருக்கவும் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மாதம் 20-ஆம் தேதி தடை விதித்திருந்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையால் உலக அளவில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பல ஆசிய நாடுகளின் அரிசியின் விலைகள் உலகச் சந்தைகளில் உயர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, அரிசி ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்க வேண்டுமென சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அரிசி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான முன்பதிவுகள் குவிந்தது வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இந்தியா தடை விதிப்பதற்கு முன்பு, ஒரு டன் அரிசி 450 டாலருக்கு பாகிஸ்தானிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சூழல் மாறி, தற்போது, 500 டாலராக உயர்ந்துள்ளது. மேலும் அரிசியின் தரத்தைப் பொருத்து வரும் நாட்களில் இந்த விலை 600 டாலரையும் நெருங்கலாம் என கூறப்படுகிறது. எங்களிடம் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், பிற ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, ரஷியாவும் அரிசியை இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதோடு, சர்வதேச சந்தையில் இந்தியாவால் அரிசிக்கு விதிக்கப்பட்ட தடை பாகிஸ்தான் ஏற்றுமதியாளர்களுக்கு பயனளித்துள்ளது என கூறினார்.
இது குறித்து பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சேலா ராம் கேவ்லானி பேசுகையில், அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் அரிசிக்கான தேவை சர்வதேச சந்தையில் பெரியஅளவில் அதிகரித்துள்ளது. இதனால், சர்வதேச அரிசி வணிகத்தில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் ஏற்றுமதியாளர்களை நோக்கி பல வணிகர்கள் வர துவங்கியுள்ளனர்.
NEWS EDITOR : RP