கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 8 மாதத்திற்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சானித்யா என பெயர் சூட்டி சீராட்டி, பாராட்டி வளர்த்து வந்தனர். இந்த நிலையில், நேற்று தம்பதி செல்போனை சார்ஜரில் போட்டுள்ளனர். அந்த சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்த தம்பதியினர், பிளக்கில் செருகி இருந்த சார்ஜர் இணைப்பை அணைக்காமல் விட்டுவிட்டனர்.
இதற்கிடையே அந்த சார்ஜர் வயரை பிடித்து சானித்யா விளையாடிக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அந்த வயரை தனது வாயில் திணித்து குழந்தை விளையாடியுள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் குழந்தையை தாக்கியது. இதில் சானித்யா பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதை பார்த்த சந்தோஷ் கல்குட்கர், சஞ்சனா தம்பதி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கார்வார் புறநகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் குழந்தை உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருப்பதாகவும், எனவே சார்ஜ் ஆனதும் செல்போன் சார்ஜர் வயர் மின் இணைப்பை அணைக்க வேண்டும் அல்லது சார்ஜர் வயரை கழற்றி பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
விசாரணையில், பிளக்கில் இணைந்திருந்த செல்போன் சார்ஜர் வயரை தம்பதியினர் அணைக்காமல் இருந்ததால், அந்த சார்ஜர் வயரை வாயில் வைத்து விளையாடியதும், அப்போது மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்ததும் தெரியவந்தது.
NEWS EDITOR : RP