வன்முறையில் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். கலவரக்காரர்கள் பல ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். திங்கள்கிழமை தொடங்கிய வன்முறை 3-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நூஹில் ஏற்பட்ட சலசலப்பைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
நுஹ் வன்முறை தொடர்பாக பேசிய ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் வன்முறையில் 5 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் நூஹ் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், நூஹ் நகரிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அதேபோல் நூஹ் வன்முறை வழக்கில் 44 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர் , இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வன்முறையில் 2 போலீசார் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். அமைதி காக்குமாறு பொதுமக்களிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அமைதியை நிலைநாட்ட சட்டம் தன் பணியை செய்து வருகிறது என்றார்.
இந்நிலையில், வன்முறையில் உயிரிழந்த 2 ஊர்க்காவல் படையினரின் குடும்பங்களுக்கு துறை சார்பில் ரூ.57 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அந்த மாநில டிஜிபி அறிவித்துள்ளார்.
குருகிராமுக்கு அருகில் உள்ள நூஹ் என்ற இடத்தில் ஒரு மத ஊர்வலத்தின் போது திடீர் வன்முறை வெடித்தது. விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரையை, குருகிராம்-ஆல்வார் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறி வன்முறை வெடித்தது. வன்முறை அதிகரித்ததால், அரசு மற்றும் தனியார் வாகனங்களை குறிவைத்து கும்பல் தாக்குதல் நடத்தியது. மாலையில், வன்முறை குருகிராம்-சோஹ்னா நெடுஞ்சாலை வரை பரவியது. பல கார்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. கல் வீச்சு தவிர துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இருதரப்பினரையும் போலீசார் தடுக்க முயன்றபோது, போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூடு காரணமாக இரண்டு ஊர்க்காவல் படையினர் உயிரிழந்துள்ளனர், பல போலீசார் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மாலை வரை வன்முறை வெடித்ததை அடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை மக்கள் மீது வீசினர். கூட்டத்தை கலைக்க வான்நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த வன்முறை காரணமாக சுமார் 2,500 பேர் குருகிராம் அருகில் உள்ள ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
நூஹ்வில் வன்முறை பற்றிய செய்தி பரவியதும், குருகிராமில் உள்ள சோஹ்னா சாலை அருகே இரு சமூகங்களைச் சேர்ந்த எதிர்ப்பாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். இரு தரப்பினராலும் பல வாகனங்கள் தாக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பல வாகனங்கள் சேதமடைந்தன. ஒரு கும்பல் நேற்று குருகிராம் அருகே பாட்ஷாபூரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு தீ வைத்து எரித்தது. இதனால் தீ அருகில் இருந்த மற்ற கடைகளுக்கும் அடுத்தடுத்து பரவி சேதப்படுத்தியது.
எந்தவொரு தனிநபரின் மத உணர்வுகளை புண்படுத்தும் அல்லது மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
மேலும், அதில் வன்முறையைக் கருத்தில் கொண்டு, குருகிராம் மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு பிறகு சோஹ்னா துணைப்பிரிவைத் தவிர சாதாரண நாட்களைப் போலவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறந்திருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குருகிராம் மாவட்ட மாஜிஸ்திரேட் நிஷாந்த் யாதவ் பிறப்பித்த உத்தரவில், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (1974 இன் 2) பிரிவு 144ன் கீழ் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நலன் கருதி, குருகிராம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து எரிபொருள் நிலையங்களையும் மூடுமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் எந்தவொரு நபருக்கும் (அவசர தேவைகள் தவிர) தளர்வான பெட்ரோல் மற்றும் டீசலை விற்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
NEWS EDITOR : RP