இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் 3-ம் ஆண்டு தொடக்க விழா கொளத்தூர் எவர்வின் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கல்லூரியில் படிக்கும் 424 மாணவிகள், 261 மாணவர்கள் என 685 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி முதல்-அமைச்சர் சிறப்புரையாற்றினார்.
அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, கடந்த 2.11.2021 அன்று நான் தொடங்கி வைத்தேன். இது தொடங்கிய 2 ஆண்டுகளில், 685 மாணவ-மாணவிகள் இந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவே இந்த கல்லூரி எவ்வளவு நன்றாக செயல்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.
முதல் வருடம் 240 பேர் சேர்ந்தார்கள். அடுத்த வருடம் மாணவர்களுடைய எண்ணிக்கை 480 ஆனது. இப்போது 685 ஆகி உள்ளது. அட்மிஷன் கேட்டு வருகின்ற விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. இதுதான் இந்த கல்லூரியுடைய மிகப்பெரிய வெற்றி.
அமைச்சர் சேகர்பாபு மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர். கல்வியே கடவுள் என்று தன்னோட பணியை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார். அறநிலையத்துறை மூலம் இன்னும் பல அறம் நிறைந்த செயல்களை அவர் செய்யவேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களான உங்களை சந்திப்பதும், உங்களிடம் பேசுவதும், அதுதான் என்னை எப்போதும் ‘ஆக்டிவ்’வாக (சுறுசுறுப்பு) வைத்துக்கொள்கிறது. அதுதான் உண்மை. எனக்கு வயது 70. ஆனால் 20 வயது போல இப்போது நிற்கிறேன். அதற்கு காரணம் நீங்கள்தான். நீங்களும் (மாணவர்கள்) படிப்பில் ‘ஆக்டிவ்’வாக இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும், குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். படிக்கும்போது பாடத்திட்டத்தை தாண்டி, உங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ‘நான் முதல்வன்’ என்கிற ஒரு அற்புதமான திட்டம். அரசு பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிகளில் சேருகின்ற மாணவிகளுக்கு, ‘புதுமைப்பெண்’ என்ற திட்டத்தின் மூலம், மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி கொண்டிருக்கிறோம். வருகிற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் இருந்து மாதந்தோறும் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க போகிறோம். கல்வி தான் சொத்து இப்படி ஒவ்வொரு கட்டமாக பார்த்து, பார்த்து திட்டங்கள் தீட்டி உதவி செய்து கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் பயன்படுத்திகொண்டு நீங்கள் எல்லோரும் நன்றாக படிக்க வேண்டும். இதுதான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி கண்ட கனவுகள். அவர்கள் கண்ட கனவு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றுகிறான் என்பதில் எனக்கு பெருமை. இதைவிட பெருமை எனக்கு வந்து சேரமுடியாது. இந்த தாய்த் தமிழ்நாட்டை பெருமை அடைய வைப்பதற்கு கல்விதான். கல்வியை யாராலும் திருடவே முடியாது. அதுதான் நிலையான சொத்து. நீங்கள் எல்லோரும் நன்றாக படியுங்கள் என்ற வேண்டுகோளை மட்டும் இந்த நேரத்தில் வைத்து, சாதிக்க முடியாத சாதனைகளை எல்லாம் நீங்கள் சாதித்து காட்டவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாணவ-மாணவிகள் நன்றி கல்வி உதவித்தொகை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சந்தோஷ் என்ற மாணவரும், சண்முக பிரியா என்ற மாணவியும் நன்றி தெரிவித்து பேசினார்கள். விழாவில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் க.மணிவாசன் வரவேற்று பேசினார். இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன் நன்றி கூறினார். விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தாயகம் கவி எம்.எல்.ஏ. மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அதிகாரி ஜெ.குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் (நிர்வாகம்) சங்கர், (கல்வி) ஹரிபிரியா, கபாலீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி.விஜயகுமார் ரெட்டி, ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.முனிரத்தினம், புருஷோத்தமன், வேல்மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ‘ஹாட்ரிக்’ வெற்றி குறித்து முதல்-அமைச்சர் நெகிழ்ச்சி விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கொளத்தூர் தொகுதி பற்றி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் பேசியதாவது:- எவ்வளவு பணி இருந்தாலும், கொளத்தூர் தொகுதிக்கு வந்து, உங்கள் முகத்தையெல்லாம் பார்த்தால்தான், எனக்குப் புது ‘எனர்ஜி’யே ஏற்படுகிறது. தமிழ்நாட்டிற்கே நான் முதல்-அமைச்சர். ஆனால், உங்களுக்கு நான் சட்டமன்ற உறுப்பினர். உங்களுடைய அன்பால்தான், உங்களுடைய பேரன்பால்தான், உங்களுடைய வாழ்த்துகளோடுதான் நான் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றேன். 3 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக என்னை இந்த தொகுதியில் நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். நீங்கள் எல்லாம் என்னை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுத்த காரணத்தால்தான் இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய முதல்-அமைச்சராக இருக்கிறேன். அதனால், நீங்கள் உரிமையோடு கேட்பதை நிறைவேற்றுகின்ற பொறுப்பு எனக்கு உண்டு. கூடுதல் பொறுப்பு உண்டு.
NEWS EDITOR : RP