சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.2,400 கோடியில் விரிவுபடுத்தும் பணி 2 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் கட்ட பணிகள் முடிந்து திறக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ரூ.250 கோடியில் 6 அடுக்கு கார் பார்க்கிங் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் உள்பகுதியில் வணிக வளாகம், ஓட்டல் மற்றும் பயணிகள் பொழுது போக்கிற்காக திரையரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மட்டுமின்றி வெளியில் உள்ள பொதுமக்களும் திரையரங்கிற்கு வருகின்றனர். இதனால் திரையரங்குக்கு வருபவர்களின் வாகனங்களே கார் பார்க்கிங்கில் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்து கொள்வதால் விமான பயணிகள் வாகனங்களை நிறுத்த முடியாமல் இடநெருக்கடி ஏற்பட்டது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த ஒரு பெண், கார் பார்க்கிங்கில் உள்ள 4-வது தளத்தில் இருந்து குதித்து தற்கொலையும் செய்து கொண்டார். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டது.
இதையடுத்து பயணிகள், காவல் துறை, பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இது பற்றிய புகார்கள் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டது.
இதையடுத்து 6 அடுக்கு கார் பார்க்கிங்கில் உள்ள திரையரங்கை மூடச் சொல்லி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் உத்தரவிட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்ற திட்டத்தில் திரையரங்கு, வணிக வளாகம், உணவகம் போன்றவைகள் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முதலில் அனுமதி வழங்கியது. ஆனால் தற்போது திரையரங்குக்கு அனுமதி கொடுத்ததில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. பாதுகாக்கப்பட்ட விமான நிலைய வளாகத்துக்குள் திரையரங்கு இருப்பது சரியாக இருக்காது என்று கருதிய இந்திய விமான நிலைய ஆணையம் திரையரங்கை மூட நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் திரையரங்கை மூட கடிதமும் அனுப்பி இருக்கிறது. இதற்கு தியேட்டர் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. முறைப்படி அனுமதி அளித்த திரையரங்கை எந்த விதத்தில் மூடுவீர்கள்? நாங்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என கூறுகின்றனர். இதனால் இந்த விவகாரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP