பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக நாளிதழ்களிலும், பருவ இதழ்களிலும் அவ்வப்போது கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு அமைப்புகள் சார்பில் கருத்தரங்கங்களும் அவ்வப்போது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குடும்ப விழாக்களில்கூட இது குறித்த உரையாடல்கள் நடப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு பொது சிவில் சட்டம் எனும் விவகாரம் தற்போது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் தற்போது அதிகரித்திருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, ஓய்வுபெற்ற நீதிபதி ரிது ராஜ் அஸ்வதி தலைமையிலான இந்தியாவின் 22-ஆவது சட்ட ஆணையம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிட்ட பொது அறிவிப்பு. அந்த அறிவிப்பில், “கடந்த 2016, ஜூன் 17 அன்று தேதியிட்ட மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் குறிப்புக்கு இணங்க, பொது சிவில் சட்டம் குறித்து இந்தியாவின் 22-வது சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. தொடக்கத்தில், இந்தியாவின் 21-வது சட்ட ஆணையம் இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்தது. அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் 07.10.2016 அன்று கோரியது. ஏராளமான கருத்துகளைப் பெற்ற 21-வது சட்ட ஆணையம், தனது அறிக்கையை 31.08.2018 அன்று வெளியிட்டது. 21-வது சட்ட ஆணையத்தின் காலம் முடிவடைந்ததை அடுத்து, 22-வது சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது. பொது சிவில் சட்டம் எனும் கருத்தாக்கத்தின் முக்கியத்துவத்தையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு இந்த விவகாரம் குறித்து புதிதாக ஆய்வு செய்ய 22-வது சட்ட ஆணையம் முடிவு செய்தது.
22-வது சட்ட ஆணையத்திடம் பொதுமக்களும், மத அமைப்புகளும் பொது சிவில் சட்டம் குறித்த தங்கள் கருத்துகளை முன்வைக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் லிங்கைப் பயன்படுத்தி அதன் மூலம் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் அல்லது சட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலர் முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பலாம். சட்ட ஆணையத்துக்கு கருத்துகளைத் தெரிவிக்கும் தனி நபர்கள் அல்லது அமைப்புகளை சட்ட ஆணையம் விசாரிக்க அல்லது கலந்துரையாட அழைக்கலாம்” என்று தெரிவித்திருந்தது.
22-வது சட்ட ஆணையத்தின் இந்த அறிவிப்பிலேயே, ஆன்லைனில் கருத்துகளை பதிவு செய்வதற்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலர் முகவரியும் தரப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து 22-வது சட்ட ஆணையம் கடந்த 14-ம் தேதி வெளியிட்ட இது தொடர்பான இரண்டாவது அறிவிப்பில், கருத்துகளைத் தெரிவிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வந்த கோரிக்கையை அடுத்து மேலும் 2 வாரங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, கருத்துகளைத் தெரிவிக்க ஜூலை 28-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று 22-வது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து 22-வது சட்ட ஆணையம் கருத்துகளைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் நாட்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்த விவகாரம் குறித்த நேரடி விசாரணையில் பங்கேற்க விரும்புவதாக சில அமைப்புகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காலக்கெடு முடிவடைந்த பிறகு, பெறப்பட்ட கருத்துகளைத் தொகுத்து அதன் பிறகு நேரடி விசாரணைக்கு 22-வது சட்ட ஆணையம் அழைப்பு விடுக்கும் என்று கூறப்படுகிறது. பொது சிவில் சட்டம் குறித்த 22-வது சட்ட ஆணையத்தின் ஆலோசனைகள், விசாரணைகள், கலந்துரையாடல்கள் நிகழும்போது இந்த விவகாரம் மேலும் சூடுபிடிக்கும்.
பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் தற்போது அதிகரித்திருப்பதற்கான இரண்டாவது முக்கிய காரணம், இந்தச் சட்டத்தை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் கடந்த ஜூன் 27-ம் தேதி பேசிய பேச்சு. பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் பேசிய அவர், “இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசியம் தேவை. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொரு சட்டம் எனும் முறையின் மூலம் ஒரு நாடு இயங்க முடியாது. தங்களின் சுய நலனுக்காக முஸ்லிம்களைத் தூண்டும் கட்சிகள் எவை என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பொது சிவில் சட்டத்தின் பேரால் இத்தகையவர்கள் தூண்டப்படுகிறார்கள். நீங்கள் சொல்லுங்கள், ஒரே குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு ஒரு சட்டமும் மற்றொரு உறுப்பினருக்கு வேறு சட்டமும் இருந்தால் அந்த குடும்பம் செயல்பட முடியுமா? இப்படிப்பட்ட இரட்டை முறையைக் கொண்டு நாட்டை நடத்த முடியுமா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். அவரது இந்த பேச்சு, பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது.
இந்த நேரத்தில், பொது சிவில் சட்டம் குறித்த சரியான புரிதல் அனைவருக்கும் தேவையான ஒன்றாக மாறி இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது, திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, தத்தெடுப்பு ஆகியவை குறித்து பேசுகிறது. பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே விவாதிக்கப்பட்டு வருகிறது. அரசியல் சானத்தை இயற்றும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பொது சிவில் சட்டத்தை சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதற்கு எதிர்ப்புகளும் இருந்தன.
இது குறித்து அரசியல் சாசன சபையில் விரிவாக விவாதிக்கப்பட்ட போதிலும், அதனை சட்டமாக்கும் முடிவு எட்டப்படவில்லை. அதேநேரத்தில், எதிர்காலத்தில் பொது சிவில் சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அரசுக்கான வழிகாட்டும் கொள்கைகள் பிரிவு 44-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்தியப் பகுதி முழுவதும் குடிமக்களுக்கு ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர அரசு முயற்சி செய்யும்” (The State shall endeavour to secure for the citizens a uniform civil code throughout the territory of India) என்று அந்தப் பிரிவு கூறுகிறது. அதேநேரத்தில், 44-ஆம் பிரிவு என்பது வழிகாட்டும் பிரிவுதானே தவிர கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்று அல்ல என்ற பார்வையும் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பரவலான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்துக்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. மிகப் பெரிய அளவில் பரந்து விரிந்த ஒரு தேசத்தில், பல்வேறு கலாச்சார, மதப் பிரிவினர் வாழும் ஒரு தேசத்தில் எல்லோருக்கும் பொதுவானதாக ஒரு சிவில் சட்டம் கொண்டு வரப்படுவது நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்ற முக்கிய வாதத்தை இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் முன்வைக்கிறார்கள். அதேநேரத்தில், பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பவர்கள், கோவாவில் பொது சிவில் சட்டம் போர்ச்சுக்கீசியர் காலத்தில் இருந்து இன்று வரை அமலில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும், பொது கிரிமினல் சட்டம் அமலில் இருக்கும்போது, ஏன் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றும் வாதிடுகிறார்கள்.
NEWS EDITOR : RP