தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 71 மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி, அதன்முலம் கிடைக்கப்பெற்ற கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த வாரம் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 20-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்கியது. தரவரிசை பட்டியலில் 25,856 இடங்களை பெற்ற மாணவர்கள் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது சேர்க்கை மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம். இன்று முதல் ஜூலை 31-ம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறும் இந்த கலந்தாய்வு http://tnmedicalselection.org, http://tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலந்தாய்வின் முடிவுகள் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒதுக்கீட்டு ஆணை அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
இதற்கிடையே, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வு வரும் 27-ஆம் தேதி சென்னை, கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு விளையாட்டு வீரா்களுக்கும், 8.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கும், 9 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.