கூகுள் நிறுவனம் ‘ஜெனிசிஸ்’ எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புராடெக்டை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்புடைய தகவல்களை திரட்டி செய்திக் கட்டுரைகளாக உருவாக்கும் திறன் கொண்டதாம். அது குறித்து பார்ப்போம்.
டெக் உலகில் அனைவரையும் பேச வைத்துள்ளது ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவின் வரவு. சாட்ஜிபிடி தான் அதற்கான விதையை உலக அளவில் பரவலாக தூவியது. அதன் வழியில் கூகுள் தொடங்கி பல்வேறு நிறுவனங்கள் ஏஐ சாட்பாட்களை அறிமுகம் செய்தன. இத்தகையச் சூழலில் செய்தி எழுதும் திறன் படைத்த ஜெனிசிஸ் ஏஐ குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இப்போதைக்கு இது வடிவமைப்பு நிலையில் உள்ளதாம். இது குறித்த அதிகாரபூர்வ தகவலை கூகுள் இன்னும் வெளியிடவில்லை. செய்தி எழுத செய்தியாளர்களுக்கு உதவுவது தான் இதன் பிரதான பணி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் செய்தி எழுதும் பணி எளிமையாகும் என சொல்லப்படுகிறது. இப்போதைக்கு சிறிய அளவில் இயங்கி வரும் சில செய்தி நிறுவனங்களுடன் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகிறதாம்.துல்லியமான செய்திகளை எழுதுவதில் மனித சக்தியின் பங்களிப்பு குறித்து அவர்கள் அழுத்தமாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த டெமோவை அமெரிக்க நாட்டின் சில முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு கூகுள் வழங்கியுள்ளது. இருந்தாலும் அதில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் இது தொடர்பாக தங்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
NEWS EDITOR : RP