ஆப்கனில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்தக் கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக பெண்கள் பலரும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலிபான்கள் கடந்த மாதம் பெண்கள் அழகு நிலையங்களை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து காபூல் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்டு வந்த அழகு நிலையங்கள் மூடப்பட்டன. தலிபான்கள் உத்தரவால் ஏராளமான பெண்கள் வேலை இழந்தனர். இந்த நிலையில், தலிபான்களின் உத்தரவை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். காபூல் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடி ”எங்கள் ரொட்டியையும், தண்ணீரையும் பறிக்காதீர்கள்” என்று முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பேசும்போது, “இன்று நாங்கள் பேசுவதற்கும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தோம். ஆனால், இன்று எங்களிடம் பேசவோ, நாங்கள் சொல்வதைக் கேட்கவோ தலிபான்கள் யாரும் வரவில்லை. அவர்கள் எங்களை கவனிக்கவில்லை. ஆனால், வானில் துப்பாக்கியால் சுட்டும், தண்ணீர் பீரங்கி மூலம் பீய்ச்சியும் எங்களைக் கலைத்தனர்” என்றனர்.
தலிபான்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து பெண்கள் பொதுவெளியில் இயங்குவதை தடுக்கும் உத்தரவுகளை பிறப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் தரப்பில், “அழகு நிலையங்கள் மீதான தடைக்கு எதிராக பெண்கள் நடத்திய அமைதியான போராட்டத்தை வலுக்கட்டாயமாக அடக்கும் செயல் எங்களை கவலையடையச் செய்துள்ளது. ஆப்கானியர்களுக்கு வன்முறையில்லா கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது. இதனை ஆட்சியில் இருக்கும் தலிபான்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
NEWS EDITOR : RP