குஜராத் மாநிலம் காந்திநகரில் ஜி-20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கிகளின் கவர்னர்களின் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த 2 நாள் மாநாட்டில் நேற்று சீன நாட்டின் நிதி மந்திரி லியு குன்னுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் செயல்படுத்தக்கூடிய பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
அதில், பன்னாட்டு மேம்பாட்டு வங்கிகளை வலுப்படுத்துவது, உலக கடன் பாதிப்பு தன்மைகள் போன்றவை அடங்கும். மேலும், இந்திய, சீன பொருளாதார நிலைமை, பணவீக்கம், வர்த்தகம் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். அத்துடன், பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு நல்ல வணிகச் சூழலைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஜி-20 நாடுகளுக்கு இந்தியாவின் தலைமைப் பொறுப்பை சீன நிதி மந்திரி லியு குன் பாராட்டினார். இந்தியாவின் தலைமையின் கீழ் இதுவரை அனேக விஷயங்கள் சாதிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கூறினார். ஜி-20 இந்தியாவின் தலைமையின் கீழ், நிலையான நிதி செயற்குழுவின் இணைத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் சீனாவின் முயற்சிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.
NEWS EDITOR : RP