2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி முதன்முறையாக நடைபெற்றது. இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், தி.மு.க., ஆர்.ஜே.டி, ஜே.டி.எஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் நேற்றும், இன்றும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் 2 நாட்களாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் இன்று நிறைவு பெற்றது. இன்று எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 3-வது எதிர்க்கட்சிகள் கூட்டம் மும்பையிலும், 4-வது கூட்டம் தமிழ்நாட்டிலும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கூட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, பெங்களுருவில் எதிர்க்கட்சிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:- “நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். 26 கட்சிகள் ஒன்றிணைந்து ‘INDIA’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மெகா கூட்டணியை வழிநடத்த 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படுகிறது. குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து மும்பை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மும்பையில் கூட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். மக்கள் நலனை காப்பதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிப்போம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் அடுத்தாண்டு தேர்தலில் தோல்வி நிச்சயம் என பா.ஜ.க. அச்சம் அடைந்துள்ளது. அனைத்து அமைப்புகளையும் எதிர்க்கட்சிகள் மீது ஆயுதமாக ஏவுகிறது மத்திய பா.ஜ.க. அரசு. நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க பா.ஜ.க. துடிக்கிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்காக டெல்லியில் ஒரு செயலகம் அமைக்கப்படும். மக்கள் நலனுக்காக பல்வேறு பரிந்துரைகளை தலைவர்கள் கொடுத்துள்ளார்கள். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றதை அடுத்து பா.ஜ.க. 38 கட்சிகள் கூட்டத்தை கூட்டியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் 38 கட்சிகள் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள 38 கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதா எனவும் தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் அணியில் சேர்ந்துள்ளவர்கள் ஜனநாயகத்தை காக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உறுதி கொண்டவர்கள். பா.ஜ.க. அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்து செல்வோம். கூட்டணி ஒருமித்த கருத்துடன் பெயர் வைத்ததே எங்களின் முதல் சாதனை. பா.ஜ.க. கூட்டணியில் மோடியின் கண் அசைவு இல்லாமல் யாரும் அசையக்கூடாது. எனவே எதிர்கட்சிகளை கண்டு பயப்படுகிறார் மோடி. பா.ஜ.க. ஆட்சியால் சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2024 நாடாளுமன்ற தேர்தல் மூலம் நிவாரணம் கிடைக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி கூட்டணி மேற்கொள்ளும்.”
NEWS EDITOR : RP