தென் கொரியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நோன்சான், யோங்ஜூ உள்ளிட்ட 13 நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சூங்சாங் மாகாணத்தில் பல அணைகள் நிரம்பி வழிகின்றன. எனவே அங்குள்ள கோசன் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெள்ளப்பெருக்கால் செஜோங் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள், கட்டிடங்கள் மண்ணில் புதையுண்டன. இதில் 20 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தென் கிழக்கு மாகாணமான கியோங்சாங்கில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக 200-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மோசமான வானிலை காரணமாக 12 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
இதற்கிடையே வடக்கு சூங்சாங் மாகாணத்தில் தண்டவாளத்தை மண் மூடியதால் ஒரு ரெயில் தடம் புரண்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ரெயில் சேவைகளும் அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அங்கு பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதனால் அங்குள்ள ராணுவ வீரர்களுடன் அந்த நாட்டின் பிரதமர் ஹன் டக் சூ ஆலோசனை நடத்தினார். அப்போது பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து பணியாற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
NEWS EDITOR : RP