இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, தலைநகா் பாரீஸில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னர் பிரான்ஸ் பயணத்தை முடித்துகொண்டு, ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு, அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது சிறப்பான வரவேற்று அளித்தார். இருவரும், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அதிபர் மாளிகையில் சந்தித்து பேசினார். எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, பாதுகாப்பு ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இரு நாடுகளும் இந்திய ரூபாய் மற்றும் யுஏஇ நாணயம் அடிப்படையில் வர்த்தகம் நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளின் நாணயங்களின் அடிப்படையில் வர்த்தகம் நடத்தும் ஒப்பந்தம் மேலும் முதலீடுகளை அதிகரிக்கும் எனக்கூறினார். தொடர்ந்து யு.ஏ.இ. சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தனிவிமானம் மூலம் நேற்றிரவு டெல்லி திரும்பினார்.
இந்த பயணத்தில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் – பிரதமர் மோடி சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் மூன்று கூடுதல் ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு
அந்த திட்டங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (Defence Acquisition Council) ஒப்புதல் அளித்திருந்தது. அதன்பிறகு வெளியிடப்பட்ட ஆவணங்களில் ரஃபேல் கொள்முதல் குறித்து எந்த விவரமும் இடம்பெறாத நிலையில், டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பி.ஜேம்ஸ் லிசா,
ரஃபேல் போா் விமானத்தின் கடற்படை பயன்பாட்டுக்கான வகையை இந்தியா தோ்வு செய்து அறிவித்துள்ளது. இந்த தற்கால தலைமுறை போா் விமானங்கள், இந்திய கடற்படையில் இணைக்கப்படும். கடற்படைக்கான ரஃபேல் போா் விமானத்தின் சோதனை நடவடிக்கை, இந்தியாவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்திய கடற்படையின் செயல்பாட்டு தேவைகளை முழுமையாக பூா்த்தி செய்வதோடு, இந்திய விமானந்தாங்கி கப்பலின் சிறப்பம்சங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும் என்பதை ரஃபேல் போா் விமானம் நிரூபித்தது. அதன்பின்னரே, கடற்படைக்கு ரஃபேல் போா் விமானங்களைத் தோ்வு செய்யும் முடிவை இந்தியா மேற்கொண்டது. இந்திய விமானப் படையின் பயன்பாட்டில் ஏற்கெனவே 36 ரஃபேல் போா் விமானங்கள் உள்ளன. அவை திருப்திகரமான செயல்பாட்டை உறுதி செய்துள்ளன. அதேபோல், இந்திய கடற்படையில் 26 ரஃபேல் போா் விமானங்களும் இணைக்கப்படும்.
இதன்மூலம் வான்வெளியிலும் கடற்பரப்பிலும் இறையாண்மையை உறுதி செய்வதில் பிரான்ஸ் நாட்டை போன்ற ராணுவத் தோ்வை கொண்ட முதல் நாடாக இந்தியா மாறும். ரஃபேல் விமானங்களை இந்தியா தோ்வு செய்திருப்பது, அந்த விமானத்தின் திறன்மிக்க செயல்பாடு, இந்தியப் படைகள்-டஸால்ட் ஏவியேஷன் இடையிலான தொடா்புகளின் ஒப்பற்ற தரம் மற்றும் இந்தியா-பிரான்ஸ் வியூகரீதியிலான உறவின் முக்கியத்துவத்தை உறுதி செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP