ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 10-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பகவத் உள்பட முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டத்துக்காக அந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே மழை காரணமாக அவ்வப்போது விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டது, பெற்றோரை அதிருப்தி அடைய செய்தது. அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, அந்த பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த தனியார் பள்ளியில் கல்வித்துறை அதிகாரியிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் ஒருவாரம் விடுமுறை விடப்பட்டு உள்ளதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
NEWS EDITOR : RP