நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை திடீரென அதிகரித்து மொத்த விலையில் கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனையானது.
விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேடு மார்கெட்டில் 1 கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சில்லறை விற்பனை கடைகளில் 1 கிலோ தக்காளி 150 முதல் 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நியாயவிலை கடைகளில் விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு அரசு அதிகமாக தக்காளியை கொள்முதல் செய்வதால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மேலும் 300 நியாய விலைக் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை ரூ.60க்கு விற்கப்பட்டபோது வெளிச் சந்தையில் விலையேறி ரூ.120க்கு விற்கப்பட்டது.
NEWS EDITOR : RP