நாடு முழுவதிலும் அனைவருக்கும் சரிநிகரான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்காக 22-வது தேசிய சட்ட ஆணையம் சார்பில் நாடு முழுவதிலும் கருத்து கேட்டு கடந்த ஜுன் 14-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, சிறுபான்மையினர், பழங்குடிகள் மற்றும் இதர சமூகத்தினர் என பலரும் சட்ட ஆணையத்திற்கு தங்கள் கருத்துகளை அனுப்பி வருகின்றனர். இவ்வாறு சட்ட ஆணையத்தால் பெறப்பட்ட கருத்துகள் இதுவரை 46 லட்சத்தை தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்கருத்துக்களை அனுப்ப வேண்டி வெறும் ஒரு மாதம் மட்டும் அவசாகம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே பொது சிவில் சட்டத்தில் அவசரம் காட்டப்படுவதாக கூறிய முஸ்லிம்கள் உள்ளிட்ட சில அமைப்பினர், அதன் தேதியை நீட்டிக்கும்படி சட்ட ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றனர். எனினும் நீட்டிப்பு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு இம்மாதம் 20-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த இருப்பதே காரணம் ஆகும்.
மசோதா அறிமுகத்திற்கு முன்பாக சட்ட ஆணையம் தான் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையை இறுதி செய்வதற்கு முன் சட்ட ஆணையம், சம்பந்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் மற்றும் பொது அமைப்பினரை நேரில் அழைத்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதற்குமுன், ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையமும் பொது சிவில் சட்டம் குறித்து இரண்டு முறை பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தது. இதன் மீது கடந்த ஆகஸ்ட் 2018-ல் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை சமர்ப்பித்து 3 வருடங்கள் முடிந்த நிலையில் அது காலாவதியாகி உள்ளது. இதன் காரணமாக, 22-வது சட்ட ஆணையம் மீண்டும் பொது சிவில் சட்டம் குறித்து கருத்துகளை கேட்டு, அறிக்கை சமர்ப்பிக்கத் தயாராகி வருகிறது.
சட்ட ஆணையத்திற்கு கருத்துகளை அனுப்ப நாளை (ஜூலை 14) கடைசிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சமூக வலைதளங்களில் பொது சிவில் சட்டம் அவசியமா, இல்லையா எனக் கேட்டு தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சட்டத்திற்கு ஆதரவாக செல்போன்களில் மிஸ்டு கால் அளிக்கும்படியும் தகவல்கள் வெளியாகின்றன. இவை அனைத்தும் உள்நோக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட சிலரால் சட்ட ஆணையத்தின் பெயரில் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.
NEWS EDITOR : RP