பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் பயணம்..!!

Spread the love

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு செல்கிறார். அங்கு நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறார்.

அவரது இந்த பயணத்தின்போது, கடற்படைக்கு தேவையான 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்வது, மும்பை கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் ஆண்டுதோறும் ஜூலை 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது, நம் நாட்டில் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவுக்கு இணையானது. பொதுவாக இந்த விழாவுக்கு வெளிநாட்டு தலைவர்கள் அழைக்கப்படுவது இல்லை. எனினும், மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினராக அவ்வப்போது அழைப்பது வழக்கம்.அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த விழாவில் பங்கேற்றார். அதற்கு அடுத்தபடியாக, நாளை நடைபெற உள்ள தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார்.

இதை ஏற்று, பிரான்ஸ் தேசிய தின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறப்பட்டு செல்கிறார்.

இந்தியா – பிரான்ஸ் இடையிலான ராஜதந்திர உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பிரதமர் மோடி அந்நாட்டுக்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில், அந்நாட்டு படையினருடன், இந்தியாவின் முப்படையினரும் பங்கேற்க உள்ளனர். இதற்காக, நமது முப்படை வீரர்கள், உயர் அதிகாரிகள் ஏற்கெனவே பாரிஸ் சென்றுள்ளனர். வீரர்கள் அங்கு அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொண்டாட்டத்தின்போது நடைபெற உள்ள போர் விமான சாகச நிகழ்ச்சியில், பிரான்ஸிடம் இருந்து இந்திய விமானப் படைக்காக வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களும் பங்கேற்க உள்ளன.

பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய கடற்படை கமாண்டர் பிரதீக் குமார் இதுபற்றி கூறும்போது, ‘‘பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்பது, முப்படையினருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பெருமையாக உள்ளது. முப்படைகளின் குழுவில் இடம்பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இரு நாட்டு படையினருக்கும் இடையிலான உறவு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்பது பெரிய கவுரவம்’’ என்றார்.

இப்பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். அப்போது இருதரப்பு உறவை மேலும்பலப்படுத்துவது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

அப்போது, பாதுகாப்பு, விண்வெளி, உள்கட்டமைப்பு, எரிசக்தி, விளையாட்டு, காலநிலை மாற்றம், கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் உள்ள கூட்டுறவை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு பிறகு, இருநாடுகளின் 25 ஆண்டுகால தொலைநோக்கு பார்வை குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

அதிபர் மாளிகையில் விருந்து: தலைநகர் பாரிஸில் உள்ள அதிபர் மாளிகையான எலிசி அரண்மனையில் அதிபர் இமானுவேல் மேக்ரான் சார்பில் பிரதமர் மோடிக்கு இன்று இரவு விருந்து வழங்கப்பட உள்ளது. புகழ்பெற்ற லாவ்ரே அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு நாளை விருந்து அளிக்கப்பட உள்ளது. பின்னர் இரு தலைவர்களும் அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்க்க உள்ளனர்.

மோடிக்கும், மேக்ரானுக்கும் நல்ல நட்புறவு உள்ளது. இது இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு வலுசேர்ப்பதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன், நேஷனல் அசெம்ப்ளி மற்றும் செனட் சபைகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

பிரான்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்திய மற்றும் பிரான்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரிகளையும் மோடி சந்திக்க உள்ளார்.

பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின்போது, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலுக்காக 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

இந்திய வெளியுறவு துறை செயலர் வினய் குவாத்ரா நேற்று கூறும்போது, ‘‘பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கலவரம் நடந்தது உள்நாட்டு விவகாரம். பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’’ என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் உள்ள கூட்டுறவை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி, 15-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் முகமது பின் ஜாயத் நயன் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram