டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழையை முன்னிட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. யமுனை ஆற்றில் நீர்மட்டம் நேற்று மதியம் 1 மணியளவில் மிக அதிக அளவாக 207.49 மீட்டர் உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்தது.
இந்நிலையில், யமுனை ஆற்றில் இன்று காலை 7 மணியளவில் வெள்ளப்பெருக்கால் நீர்மட்டம் 208.46 மீட்டராக உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து அரியானாவின் ஹத்னிகுண்டு பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து நீர் திறந்து விடப்படுகிறது. அபாய அளவை விட 3 மீட்டர் உயரத்தில் நீர்மட்டம் உள்ளது.
இதனால், வெள்ள நீர் டெல்லியில் உள்ள சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை தொடர்ந்து, ஒருபுறம் வாகன போக்குவரத்து, மறுபுறம் வெள்ள நீர் என ஜி.டி. கர்னல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய நீராணையம், இன்று மதியம் 2 மணிக்கு பின்னர் நீர் வெளியேற்றம் நிறுத்தம் செய்யும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு வெளியே வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. அவர் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
NEWS EDITOR : RP