டாக்டர்களிடம் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கினார்: பெண் இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம்..!!

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரை சேர்ந்த சிறுமியை கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி காணவில்லை என்று அவரது தந்தை மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது காணாமல் போன 17 வயது சிறுமியை சென்னை மீனம்பாக்கம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 27) என்பவர் அழைத்து சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் ரஞ்சித்தை பிடித்து அவரிடம் இருந்த சிறுமியை மீட்டனர்.

சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னை அழைத்து சென்ற ரஞ்சித் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ரஞ்சித் மீது புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி போக்சோ சட்டத்தின் கீழ் ரஞ்சித்தை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்த போது அந்த சிறுமிக்கு ஏற்கனவே கருக்கலைப்பு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதா, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரிடம் தீவிரமாக விசாரித்த போது செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் பிரபல பெண் டாக்டர் ஒருவர் சிங்கப்பெருமாள்கோவிலில் நடத்தி வரும் ஆஸ்பத்திரி மற்றும் மறைமலைநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆஸ்பத்திரியில் தனது மகளுக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறினார்.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறிய ஆஸ்பத்திரிக்கு வண்டலூர் அனைத்து மகளிர் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதா நேரில் சென்று சம்பந்தப்பட்ட அரசு டாக்டர் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டரிடம் விசாரித்த போது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், அவருடன் சென்ற வக்கீல் இருவரும் சம்பந்தப்பட்ட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டர்களிடம் சட்டப்படி 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தது குற்றமாகும். எனவே உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர். இதனால் பயந்து போன 2 பெண் டாக்டர்களிடம், இன்ஸ்பெக்டர் மற்றும் வக்கீல் நடத்திய பேச்சுவார்த்தையில் அரசு பெண் டாக்டர் ரூ.10 லட்சமும், தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டர் ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம் தருவதற்கு ஒப்புக்கொண்டு பணத்தை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தங்களை மிரட்டி வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதா ரூ.12 லட்சத்தை வாங்கி சென்றதாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் 2 பெண் டாக்டர்களும் புகார் செய்தனர். புகாரின் பேரில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உரிய விசாரணை நடத்திய பின்னர் வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டியை பணியிடைநீக்கம் செய்து நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் கடந்த 3-ந்தேதி தான் வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தாம்பரம் மாநகர போலீசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை ஒட்டியுள்ள மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதியில் உள்ள சில தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கிளினிக்கில் சிறுமிகளுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் சம்பவங்கள் பல காலமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் பணியில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி மீது அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம் மாநகர போலீஸ் ஆணையகரம் புதிதாக உருவாக்கப்பட்ட பின் வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் கூடுவாஞ்சேரியில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி புதியதாக தொடங்கப்பட்டது. இதனையடுத்து புதிதாக தொடங்கப்பட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முதல் இன்ஸ்பெக்டராக பதவி ஏற்றுக்கொண்ட விஜயலட்சுமி கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி இரவு பணியில் இருக்கும் போது படப்பையில் உள்ள ஒரு டீக்கடையில் ஓசியில் ஜூஸ், சாண்ட்விச், சாக்லெட் கேட்டு கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-வது இன்ஸ்பெக்டராக பதவி ஏற்றுக்கொண்ட மகிதா டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதே போல மணிமங்கலம் போலீசார் படப்பையில் நிச்சயதார்த்தம் செய்த ஜோடியை மிரட்டி கூகுல் பே மூலம் லஞ்சம் வாங்கிய போலீசாரை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் பணியிடை நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram