ஜார்க்கண்டில் தன்பாத் நகரில் உள்ள அனுமன்கார்ஹி பகுதியில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி உஷா குமாரி (வயது 17). இவர் நெற்றியில் திலகம் வைத்து பள்ளிக்கு சென்று உள்ளார்.
இதற்காக அந்த மாணவியை ஆசிரியை சிந்து அடித்து உள்ளார். மொத்த வகுப்புக்கு முன்பு அவரை அவமதிப்பு செய்து உள்ளார் என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வருத்தத்தில் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். தற்கொலை கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்து உள்ளார். போலீசார் அதனை கைப்பற்றி உள்ளனர்.
இதுபற்றி தன்பாத் நகர குழந்தைகள் நல கமிட்டியின் தலைவர் உத்தம் முகர்ஜி கூறும்போது, இது ஒரு தீவிர விவகாரம். அந்த பள்ளி சி.பி.எஸ்.இ. வாரியத்துடன் இணைக்கப்படவில்லை. மாவட்ட கல்வி அதிகாரியிடம் நான் விவரங்களை கூறி விட்டேன்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளேன். குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளார் என அதுபற்றி தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோவுக்கும் டுவிட்டரில் பதிலளித்து உள்ளார்.
இந்த சம்பவத்தில், முதல்வர் ராஜ்கிஷோர் சிங் மற்றும் சிந்துஜா ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
சம்பவம் நடந்த பின்பு, மாணவியின் பெற்றோர் மற்றும் உள்ளூர்வாசிகள், பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக மாணவியின் உடலுடன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்து உள்ளனர். எனினும், ஆசிரியை சிந்து கூறும்போது, நூலகத்தில் மாணவி உஷா அழுதபடி காணப்பட்டார். என்ன விவரம் என கேட்டேன். திலகம் வைத்து இருந்ததற்காக திட்டினேன். அதற்கு உஷா, உங்களுக்கு இதுபற்றி என்னிடம் கூற எந்த உரிமையும் இல்லை என கூறினார். அதனால், மாணவியை முதல்வர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றேன். அதன்பின் எனது வகுப்புக்கு சென்று விட்டேன். மாணவியை அடிக்கவில்லை. குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கூறியுள்ளார்.
NEWS EDITOR : RP