தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் பஷீர்பாக் ஜங்சன் பகுதியில் கடந்த திங்கட் கிழமை இரவில் ஆம்புலன்ஸ் ஒன்று சைரன் ஒலித்தபடி விரைவாக சென்று உள்ளது. இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை இயங்க செய்து போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்து, ஆம்புலன்ஸ் செல்ல வழியேற்படுத்தினார்.
அதன்பின்பு, ஆம்புலன்ஸ் சென்று உள்ளது. ஆனால், அந்த ஆம்புலன்ஸ் நேராக சாலையோரம் இருந்த உணவகம் ஒன்றின் முன் சென்று நின்று உள்ளது. அந்த ஆம்புலன்சில் நோயாளி யாரும் இல்லை. ஆனால், சைரன் அடித்தபடி சென்று உள்ளது.
இதுபற்றி ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் விசாரணை நடந்தது. அதில், அவசரமில்லாத சூழலில் அவர் சைரன் பயன்படுத்தியது தெரிய வந்து உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வதற்காக அவர் சைரன் ஒலித்து உள்ளார். போக்குவரத்து விதிமீறலை மறைக்கவும் அவர் முயற்சித்து உள்ளார்.
அந்த வாகனம் போக்குவரத்து சிக்னலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சென்றதும் உணவகம் அருகே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனை போக்குவரத்து காவலர் கவனித்து உள்ளார். ஆம்புலன்சில் நோயாளிகளோ, அவசர சூழலோ காணப்படவில்லை. 2 நர்சுகள் இருந்து உள்ளனர். கையில் பழச்சாறு பாட்டிலுடன் இருந்த ஓட்டுனர் காவலரிடம் கூறும்போது, நர்ஸ் ஒருவருக்கு சுகாதார பாதிப்பு ஏற்பட்டது என கூறியுள்ளார். போக்குவரத்து காவலர் உடலுடன் இணைக்கப்பட்ட வீடியோ கேமிரா உதவியுடன், நடந்த விசயங்களை படம் பிடித்து உள்ளார். அவர் ஓட்டுனரிடம், சைரன் ஒலித்ததும் ஆம்புலன்சுக்கு வழியேற்படுத்தி கொடுத்தேன். நீங்கள் மருத்துவமனை செல்லாமல், பஜ்ஜி சாப்பிட்டு கொண்டும், டீ குடித்து கொண்டும் இருக்கிறீர்கள். நோயாளி எங்கே? பஜ்ஜி சாப்பிடுவதற்காக சைரன் அடித்து செல்கிறீர்களா? இந்த விசயம் பற்றி உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவேன். வீடியோவையும் அவர்களுக்கு அனுப்பி வைப்பேன் என கூறியுள்ளார்.
NEWS EDITOR : RP