தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப் 4 தேர்விற்கான பணியில் 10,219 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கலந்தாய்வில் ஒரு பணியிடத்திற்கு மூன்று பேர் வீதம் கலந்து கொள்வதற்கான தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் தகுதி பெற்ற தேர்வர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
முதல் கட்டமாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் விபரங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் தேர்வாணைய இணையதளத்திலும் அவர்களுக்குரிய அழைப்பு கடிதம் வெளியிடப்படும். தபால் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பப்பட மாட்டாது. தேர்வர்கள் ஏற்கனவே அனுப்பி வைத்த சான்றிதழ்களின் உண்மைத் தன்மையின் அடிப்படையில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி கலந்தாய்வில் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில் திருப்தி இல்லை என்றால் அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP