சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அதில், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி ஜெ.நிஷாபானு தீர்ப்பு அளித்தார். ஆனால், செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை. உடல்நலம் தேறிய பின்னர் அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கலாம் என்று நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து இரு தீர்ப்பில் எது சரியானது என்பதை முடிவு செய்ய 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, இந்த வழக்கில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராக உள்ளதால், விசாரணையை 11-ந் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் நீண்ட வாதங்கள் நடத்தி வழக்கை இழுத்தடிக்க அனுமதிக்கக்கூடாது என்றார்.
அதற்கு நீதிபதி, ‘இந்த வழக்கை விடுமுறை நாளான வருகிற சனிக்கிழமை ஒரேநாளில் விசாரிக்கலாம். அன்று இருதரப்பினரும் தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும்’ என்று கருத்து கூறினார். இந்த முடிவை வரவேற்பதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். அதையடுத்து நீதிபதி,’அ.தி.மு.க. வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டபோது, சனிக்கிழமை ஒரேநாளில் 3-வது நீதிபதி விசாரணை நடத்தினார். எனவே இந்த வழக்கையும் விடுமுறை தினத்தில் விசாரிக்க தலைமை நீதிபதியிடம் அனுமதி கேட்கிறேன். இந்த வழக்கு விசாரணையை நாளை (இன்று) பிற்பகலுக்கு தள்ளிவைக்கிறேன்’ என்றார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி வழக்கை எப்போது விசாரிக்கலாம் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு தகுந்ததா எனவும் 3-வது நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.