இந்தியா முழுவதும் 23 இடங்களில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. அண்மையில் தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்.ஐ.ஆர்.எப். அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. இந்த பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய கிளையை தொடங்க உள்ளதாக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனர் காமகோடி அறிவிப்பு வெளியிட்டார். ஒரு ஐ.ஐ.டி.யின் கிளையை அயல்நாட்டில் தொடங்க இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தான்சானியாவிற்கு சென்றிருக்கிறார். கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரை பகுதியில் உள்ள தான்சானியா தீவுக்கூட்டமான சான்சிபாரில், ஜெய்சங்கர் மற்றும் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி முவின்யி ஆகியோர் முன்னிலையில் இந்தியாவின் கல்வி அமைச்சகம், ஐ.ஐ.டி. மெட்ராஸ் மற்றும் சான்சிபாரின் கல்வி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சகம் ஆகியோருக்கிடையே ஐ.ஐ.டி. மெட்ராஸின் வளாகத்தை அமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நேற்று கையெழுத்தானது.
இந்த வளாகம், இந்தியாவிற்கும் தான்சானியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பை பிரதிபலிக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் உலகளாவிய தெற்கில் உள்ள மக்களுடன் நல்லுறவுகளை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்துவதையும் இதன் மூலம் இந்தியா நினைவூட்டுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவை அங்கீகரித்து, சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸின் வளாகத்தை அமைப்பதன் மூலம், இரு தரப்பிற்கான கல்வி கூட்டுறவு முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐ.ஐ.டி.யில், வரும் அக்டோபர் மாதத்திலிருந்து கல்விக்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்.”
NEWS EDITOR : RP