சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இதனிடையே, இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக ’வண்ணாரபேட்டையில’ என்கிற இரண்டாம் சிங்கிள் பாடல் கடந்த ஜூன் 14-ம் தேதி அன்று வெளியானது. இப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கதையின் நாயகன் சிவகார்த்திகேயன், இயக்குனர் மிஷ்கின் , இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகை சரிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் தெரிவித்ததாவது..
” நான் சிவகார்த்திகேயனை முதலில் பார்த்தபோது நான் நல்லா மிமிக்கிரி செய்வேன் என்னிடம் சொன்னார். நீ பெருசா சாதிக்கணும்னு சொன்னேன். இப்போ சாதித்து விட்டார். எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சரிதா சிவாவை ரஜினி என்று சொன்னார்கள். அவர் ரஜினி தான் ” என மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP