சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலில் மீன்பிடிக்க 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்த 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கரைக்கு திரும்பினர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு பிறகு சுமார் 650 கிலோ எடையுள்ள ஏமங்கோலா உள்ளிட்ட ராட்சத மீன்களை பிடித்து வி்ற்பனைக்கு கொண்டு வந்தனர். பெரிய வகை மீன்களை கிரேன் மூலம் விசைப்படகில் இருந்து இறக்கி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொண்டு சென்றனர். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் அதிக அளவில் கரை திரும்பியதால் பெரிய வகை மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு குவிந்து இருந்தது. அதிகாலை முதலே மீன்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
ஆனால் கடந்த வாரத்தைவிட மீன்களின் விலை 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை அதிகரித்து இருந்தது. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் விலையை பொருட்படுத்தாமல் பெரிய வகை மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
காசிமேட்டில் மீன் விலை(கிலோவில்) வருமாறு:- முழு வஞ்சிரம்-ரூ.1400, துண்டுகளாக வெட்டப்பட்ட வஞ்சிரம்-ரூ.1800, சங்கரா-ரூ.450, இறால்-ரூ.480, சீலா-ரூ.500, கருப்பு வவ்வால் மீன்-ரூ.1000, வெள்ளை வவ்வால் மீன்-ரூ.1400, கொடுவா- ரூ.700, டைகர் இறா-ரூ.1100, நண்டு- ரூ.500, சங்கரா-ரூ.400, கடல் விரால்-ரூ.800, களவான் மீன்-ரூ.600, நெத்திலி – ரூ.300, கடம்பா மீன்-ரூ.350, சுறா-ரூ.500, நாக்கு-ரூ.480.
NEWS EDITOR : RP