ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 32). இவரது 1½ வயது ஆண் குழந்தை முகமது மகிரின் தலையில் நீர் கட்டியிருந்ததால் கடந்த ஆண்டு மே மாதம் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஒரு வருடமாக சென்னையில் தங்கி குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள்.
இந்த நிலையில், அறுவை சிகிச்சையின் போது குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த ‘டியூப்’ கடந்த மாதம் 25-ந்தேதி, இயற்கை உபாதை கழிக்கும்போது வெளியே வந்தது.
இதையடுத்து, உடனடியாக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அன்றைய தினம் இரவு 9 மணியளவில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், குழந்தையின் இடது கை மற்றும் வலது காலில் ‘டிரிப்ஸ்’ போடப்பட்டது. அதன்மூலமே குழந்தைக்கு மருந்து செலுத்தப்பட்டது.
குழந்தை தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தது. இந்த நிலையில், கடந்த 29-ந்தேதி குழந்தையின் வலது கையில் மருந்தை செலுத்தினார்கள். மருந்து ஏற்றிய சிறிது நேரத்திலேயே குழந்தையின் கை விரல்கள் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இதனால், பதற்றம் அடைந்த குழந்தையின் தாய் அஜிஷா உடனடியாக பணியில் இருந்த நர்சிடம் தெரிவித்தபோது, இது ஒன்றும் இல்லை. மருந்து நன்றாக தான் சென்றுகொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
ஆனால், குழந்தையின் வலது கை முட்டுப்பகுதி வரை கொஞ்சம், கொஞ்சமாக கருப்பு நிறமாக மாற தொடங்கியது. இதனால், பதறிப்போன அஜிஷா மீண்டும் நர்சிடம் கூறியுள்ளார். இதையடுத்து, குழந்தையின் கையை டாக்டர்கள் பார்த்தனர். அப்போது, வலது கையை அகற்ற வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று மதியம் 2 மணியளவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் தோள்பட்டை வரையில் கை அகற்றப்பட்டது. தனது மகனின் கை அகற்றப்பட்டதற்கு தவறான சிகிச்சையே காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்தநிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில் இன்று விசாரணையை தொடங்குகிறது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம். 3 துறை மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரணையை மேற்கொள்ள உள்ளது. குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 2 தினங்களில் விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட உள்ளது. செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் வலது கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
NEWS EDITOR : RP