திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நரசிம்மசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 42). இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள உள்ளிம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிரிஜா (34) என்பவருடன் 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கடந்த 7 ஆண்டுகளாக விநாயகம் தனது மனைவி கிரிஜாவுடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்ததால் இவர்களது மகன் பாட்டி வீட்டில் தங்கியிருந்து அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இருவரும் பெங்களூருவில் இருந்து உள்ளிம்பாக்கம் கிராமத்திற்கு மகனை பார்க்க வந்தனர். பின்னர் விநாயகம் மனைவி கிரிஜாவுடன் திருத்தணிக்கு வந்தார். இதற்கிடையே விநாயகம் தனது மனைவி கிரிஜாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விநாயகம் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவி கிரிஜாவின் கழுத்து, தலை உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டினார். கிரிஜாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றபோது, விநாயகம் உள்பக்கமாக கதவை பூட்டி விட்டார். உடனே பொதுமக்கள் சம்பவம் குறித்து திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டை சுற்றி வலைத்ததால் விநாயகம் போலீசாரிடம் சரண் அடைந்தார். மேலும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கிரிஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிரிஜாவின் அண்ணன் முனுசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருத்தணி இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் விநாயகத்தை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார். மனைவியின் நடத்தையில் சந்தேக பட்டு அவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
NEWS EDITOR : RP