மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்

Spread the love

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் D.K. சிவக்குமார், மத்திய நீர்வழித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி அன்று எழுதியுள்ள கடிதம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அக்கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழ் நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதாகவும், அத்திட்டங்களை நியாயப்படுத்தும் தமிழ் நாடு அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் இரட்டை நிலையை எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வரும் நீர் பிலிகுண்டுலுவில் அளவிடப்பட்டு, அதன்பிறகு ஒகேனக்கல்லுக்கு வரும் தமிழகத்தின் பங்கு நீரைக்கொண்டுதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தமிழ் நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுகிறது என்பதே அப்பட்டமான பொய்யாகும். தமிழகத்திற்கு வரும் நீரில், தமிழகம் செயல்படுத்தும் குடிநீர் திட்டங்களை குறை சொல்ல கர்நாடகத்திற்கு
எந்த உரிமையும் கிடையாது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என்று பாரதப் பிரதமருக்கு, 4.9.2018 அன்று கடிதம் மூலமாகவும், 8.10.2018 அன்று நேரிலும் நான் வலியுறுத்தினேன்.மேலும், மத்திய நீர்வளத் துறைக்கு 17.09.2018, 31.10.2018 ஆகிய தேதிகளில் கடிதங்கள் மூலமாக மேகதாது மீதான தமிழ் நாட்டின் வலுவான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேகதாது குறித்து பாரதப் பிரதமருக்கும் ,  மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் 27.11.2018 அன்று நான் கடிதம் எழுதியுள்ளேன். எனது தலைமையிலான அம்மாவின் அரசு தொடர்ந்து கடிதம் மற்றும் நேரிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசேன், தமிழகத்தின் ஒப்புதல் பெறாமல் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும், காவிரி ஆற்றுப் படுகைக்குள் மேகதாது வருவதால், ஆணையத்தின் தலையீடு நிச்சயம் இருக்கும் என்றும் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து சென்ற மே மாதம் வரை மேகதாது பிரச்சனை அமைதியாக இருந்தது. ஆனால், கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, மேகதாதுவின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்று துணை முதலமைச்சர் சிவக்குமார் காவிரி பிரச்சனையை பெரிதுபடுத்தி வருகிறார்.

திமுக ஆட்சி செய்யும்போதெல்லாம் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுப்பது வாடிக்கை. கச்சத் தீவு, காவிரி என ஆரம்பித்தது இன்றுவரை நீடிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டியே தீரப்படும் என்றும், அதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பரப்புரையில் தெரிவித்திருந்தது. அப்போதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்த  திமுக அரசு அதை கண்டித்திருக்க வேண்டும். ஆனால், கர்நாடகத்தில் உள்ள தங்களின் குடும்பத் தொழில்கள் பாதிக்கப்படும் என்ற பயத்தில், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கை கட்டி, வாய் பொத்தி, பேசா மடந்தையாக வேடிக்கை பார்த்த  திமுக அரசையும், சந்தர்ப்பவாத முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே, துணை முதலமைச்சர் சிவக்குமார் தலைமையில் 30.5.2023 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போதே நான், கர்நாடக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன். திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், சிவக்குமாருக்கு அப்போதே தக்க பதிலடி கொடுத்திருந்தால், அவர் இன்று இத்தகையை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கமாட்டார். கர்நாடகாவில், காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்று திமுக, தமிழக காங்கிரஸ், மற்றும் கூட்டணிக் கட்சியினர், கர்நாடகாவிற்கு அழையா விருந்தாளிகளாகச் சென்று தேர்தல் பரப்புரையை மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற பின்னர் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, கர்நாடக மாநில காங்கிரசுக்கு சாமரம் வீசினார்கள்.

துணை முதலமைச்சர் சிவக்குமார் 30.5.2023 அன்று பேசியதற்கு, திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து கடும் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை. தமிழ் நாட்டில் வேறு பிரச்சனைகளே இல்லை என்பது போல், கடந்த 20 நாட்களாக ஊழல் அமைச்சர் செந்தில்பாலாஜி, மத்திய அமலாக்கத் துறையின் கைகளில் சிக்கிவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே திமுக அரசு செயல்படுகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சியின் சூழ்நிலையை, கர்நாடக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், அம்மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் 20.6.2023 அன்று மத்திய நீர்வழித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய கையோடு 30.6.2023 அன்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை நேரில் சந்தித்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

இனியாவது கர்நாடகத்தின் தந்திரத்தைப் புரிந்துகொண்டு, இந்த திமுக அரசு, ஊழல் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையினரின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று காலம் கழிப்பதை விட்டுவிட்டு, மேகதாது பிரச்சனையுடன், தமிழகத்தில் தற்போது காணப்படும் விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சனைகளைத் தீர்க்கவும், அனைத்துத் துறைகளிலும் தலைவிரித்தாடும் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் போன்றவைகளை கைவிட்டுவிட்டு, மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆனபின்னும் டெல்டா மாவட்டங்களின் கடைமடை வரை தண்ணீர் சென்றடையாமல் சிரமப்படும் விவசாயிகளின் வேதனைகளிலும் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அம்மா அவர்களும், தொடர்ந்து அம்மாவின் அரசும்தான் காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுத்தது; மத்திய அரசிதழில் உச்சநீதிமன்ற ஆணையை வெளியிடச் செய்தது. 2018-ஆம் ஆண்டு எங்களுடைய கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கிய போராட்டத்தையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைபடுத்தும் குழு அமைக்கப்பட்டது. அதன்பிறகு 2018 முதல் சகோதரர்கள் போல் அமைதியாக வாழும் கர்நாடக தமிழக மக்களின் உறவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் அவர்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக அரசின் பொம்மை முதலமைச்சர், தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக செயல்படும் கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு உடனடியாக, தனது பெயரிலேயே கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வலியுறுத்துவதோடு, இப்பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், மத்திய அரசோடு எது எதற்கோ மோதும் தி.மு.க. அரசின் முதலமைச்சர், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 38 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களோடு, உடனடியாக புதுடெல்லிக்கு படையெடுத்து, கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு; கர்நாடக அரசின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்காத செயலற்ற திமுக அரசையும் கண்டிக்கிறேன். மேலும், தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram