இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது..!!

Spread the love

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலக அறையிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். 13-ம் தேதி காலை தொடங்கிய சோதனை 14ம் தேதி அதிகாலை 2 மணி வரை நீடித்தது. சோதனைக்கு பின் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

கைது நடவடிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இருதய ரத்தக்குழாயில் 3 இடங்களில் அடைப்பு கண்டறியப்பட்டது. இதனிடையே, செந்தில் பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்தவும், 15 நாட்கள் விசாரணை காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்ட சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு நீதிபதி, செந்தில் பாலாஜியை 8 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார். ஆனால் ஐகோர்ட்டு உத்தரவின்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அவரை அமலாக்கத்துறையினரால் விசாரிக்க முடியவில்லை. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு இருப்பதால், அவரிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரித்தளித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு ஆகிய இலாகாக்களை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்) ஆகிய இலாகாக்களை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் துறைகளாக ஒதுக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். இந்த இலாகா மாறுதல் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடந்த 16-ந் தேதி செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், இலாகா மாறுதல் பரிந்துரையை கவர்னர் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் செந்தில்பாலாஜி சில குற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதாலும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பதாலும், அவர் தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பதை கவர்னர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று இரவு கவர்னர் அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார். மாநில அரசு மற்றும் முதல்-அமைச்சரின் பரிந்துரையின்றி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியலமைப்பு சட்டத்தை மீறி அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை கவர்னர் ஆர்.என்.ரவி நீக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார். கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் அரசு உறுதியாக உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram