“சுனாமி வேகத்தில் அரசுப் பணிகள்” ~ முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Spread the love

கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட ஆய்வுக் கூட்டத்தில் 11 துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்றைய ஆய்வுக் கூட்டத்தில், உயர்கல்வி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, நீர்வளம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, பொது மற்றும் மறுவாழ்வு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் ஆகிய 13 துறைகளைச் சார்ந்த நடைமுறையில் உள்ள 55 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், 35 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், துறைச் செயலாளர்கள் தங்களது துறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து விளக்கியதாக தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது- நமது அரசு செயல்படுத்தி வரும் முத்திரைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்குப் பொறுப்பு வகிக்கின்ற அமைச்சர்களோடும், செயலாளர்களோடும், துறைத் தலைவர்களோடும் ஆய்வினை மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில், கடந்த 16-6-2023 அன்று 11 துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றைக்கு 13 துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து ஆய்வினை நடத்தி முடித்திருக்கிறோம். தமிழ்நாட்டின் எதிர்கால கட்டமைப்பு, வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ, அவற்றை நமது அரசு கண்ணும், கருத்துமாக செயல்படுத்தி வருகிறது. மாநில பொருளாதாரத்தின் ரத்த நாளங்களாக செயல்படுவதில் மூலதன முதலீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அனைத்துத் துறையின் வளர்ச்சியினையும் கருத்தில் கொண்டு, அந்தந்த துறைகளின் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டது. மனிதவள மேம்பாடு, மக்கள் நல்வாழ்வு, சமூக நீதி, வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி என பல்வேறு காரணிகளை மையமாக க் கொண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது வடிவமைக்கப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சில திட்டங்கள், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. இவற்றையெல்லாம் கருத்திலே கொண்டுதான், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு இன்ஜினாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து பாராட்டியதை நான் இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன். தமிழ்நாடு அரசு, தொழிற்சாலைகளுக்காக உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால், மேலும் தொழில் நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருவதாகவும், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் தொழில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளதாகவும் ஊடகங்களும், பத்திரிகைகளும் பாராட்டுகின்றன, தலையங்கம் தீட்டுகின்றன. பாராட்டுக்கள் ஆனாலும், விமர்சனங்கள் ஆனாலும், அவற்றை மனதிலே நிறுத்தி, இலக்கை நோக்கி நாம் அனைவரும் வெற்றி நடை போட வேண்டும். கடந்த முறை ஆய்வின்போது, உங்களது துறைகளுக்கான முத்திரைத் திட்டங்களில் தெரிவிக்கப்பட்ட பணி முன்னேற்றத்தினை தற்போது ஒப்பிடும்போது, குறிப்பிடத்தக்க அளவிற்கு பெரும்பான்மையான திட்டங்களில் முன்னேற்றம் காணப்பட்டாலும், ஒரு சில திட்டங்களில் இன்னும் தொய்வு நிலை இருப்பதை நம்மால் உணர முடிகிறது. தொழிற்சாலைகளுக்கு உகந்த சூழ்நிலைகளான நிலம் கையகப்படுத்துதல், போக்குவரத்து வசதி, ஏற்றுமதிக்கான வசதிகள், உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அத்தகைய சவால்களை சந்திப்பதில் நமது அரசு தீவிர கவனம் செலுத்தி, பிரச்சனைகளுக்கு இடம் தராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து தொழில்கள் தொடங்கிட வழி ஏற்படும். இதற்கான ஒத்துழைப்பினை அனைத்துத்துறை அலுவலர்களும் நல்கிட வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். அரசுப் பணிகள் ஆமை வேகத்தில் அல்ல; சுனாமி வேகத்தில்கூட நடைபெறும் என்பதனை எடுத்துக் காட்டக்கூடிய வகையில் நாம் சில திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம். குறிப்பாக, குறிப்பிட்ட காலத்தில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளதை பொது மக்களும், நடுநிலையாளர்களும் பாராட்டுகிறார்கள். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் விரைவில் திறக்கப்படவிருக்கிறது. இவை அனைத்தும் உங்கள் பங்களிப்பினால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. எனவே, ஒவ்வொரு திட்டத்திலும் உங்களது அர்ப்பணிப்பு, பங்களிப்பு அவசியம் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நீங்கள் திட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கும் போதுதான், அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் நாம் கொண்டு வர முடியும். செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்பது, இரண்டாண்டு காலமாக ஏழை மக்களின் நலன் காக்கக்கூடிய குடியிருப்பாக மாறியிருக்கிறது. தலைமைச் செயலகம் என்பது தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் முன்னேற்ற உழைக்கும் முதன்மைச் செயலகமாக மாறியிருக்கிறது. தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் 400-க்கும் மேற்பட்ட துறைரீதியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கோட்டையில் தீட்டுகிற திட்டங்கள் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு, மாவட்டங்கள் தோறும், அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ‘முதல்வரின் முகவரி’ திட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் எத்தனை வேகமாக செயல்படுத்தப்படுகின்றன என்பதை நாட்டு மக்கள் கண்கூடாகப் பார்த்து வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ, அவற்றையெல்லாம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு நிறைவேற்றி இருப்பதை எண்ணி நான் உள்ளபடியே பெருமையடைகிறேன். கடந்த காலங்களில் சென்னை மாநகரம் மழை, வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதை உணர்ந்த நாம், அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கடந்த ஆண்டு எடுத்ததன் காரணமாக, இன்றைக்கு பெரிய மழை வந்தாலும், மழை நீர் பெரிய அளவில் தேங்குவதில்லை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. நமது அரசின் இதுபோன்ற செயல்பாட்டினை மக்கள் வரவேற்றுப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, திட்டங்களைப் பொறுத்தவரையில், அவற்றை அறிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அந்த திட்டங்களை விரைந்து நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதிலும் நாம் தனிக் கவனம் செலுத்த வேண்டும். திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதம் திட்டச் செலவினத்தை அதிகப்படுத்தும்; மக்களுக்கு அது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் உணர்ந்து, திட்டப் பணிகளை துரிதமாகவும், தரமாகவும் முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாகவும், வளமான மாநிலமாகவும் உருவாக்கிட வேண்டும்; எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் போன்ற உயரிய இலட்சியத்தோடு வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் நமது அரசுக்கு, நீங்கள் உங்களது ஒத்துழைப்பினை என்றென்றும் நல்கிட வேண்டும்’ என்று பேசினார். இக்கூட்டத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் பொன்முடி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram