சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இவரது மனைவி சரண்யா (33). இவர் கடந்த 25-ந்தேதி குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு சென்று விட்டு, அங்கிருந்து சென்னை எழும்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் ரமேஷ் பொதுப்பெட்டியில் ஏறி விட்டு, மனைவி சரண்யா மற்றும் குழந்தைகளை ஊனமுற்றோர் பெட்டியில் ஏற்றி விட்டுள்ளார். இந்த நிலையில், வியாசர்பாடி அருகே ரெயில் மெதுவாக சென்ற நிலையில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் ஏறிய மர்ம நபர்கள் 4 பேர், சரண்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 9 பவுன் மதிப்புள்ளான தாலி சங்கிலி, மோதிரம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு வண்ணாரப்பேட்டை கடற்கரை இடையே ரெயில் இருந்து குதித்து ஓடிவிட்டனர்
இதுகுறித்து ரமேஷ் பெரம்பூர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பெரம்பூர் ரெயில்வே போலீஸ் தனிப்படை அமைத்து குற்றவாளிகள் தேடி வந்த நிலையில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் ஷாஜகான் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.
ஷாஜகான் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இவரது கூட்டாளிகளான பாஸ்கர் என்ற விஜய் (29), ஜோஸ்வா (24), தங்கபாண்டியன் (27) ஆகிய 3 பேரையும் வியாசர்பாடி ரெயில் நிலையத்தில் பெரம்பூர் ரெயில்வே போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.
NEWS EDITOR : RP