திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட 26-வது வார்டு பெரிய காலனி மேட்டு தெரு பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர்.
இந்தப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு சாலைகள் போடப்படாமல் நகராட்சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே மழைக்காலங்களில் சாலை சேறும் சகதிகமாக மாறி வாகனங்கள் செல்லவே முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதி மக்கள் மழை காலங்களில் சாலையில் செங்கற்களை வைத்து அதன் மீது ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர்.
சுமார் 20 அடி அகலம் உள்ள இந்த சாலை தற்போது ஒத்தையடி பாதையாக மாறி உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள், சிறுவர்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், வயதானவர்கள் அவதியடைந்து வருகின்றனர். சாலையில் இருபுறமும் செடிகள் அடர்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் அதிமாக விஷ பூச்சிகள் நடமாடுகின்றன.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சார்பில் திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சாலை வசதியின்றி தவிக்கும் பெரியகாலனி பகுதியில் திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
NEWS EDITOR : RP