குஜராத்தின் ஆமதாபாத் நகரில் தினமும் 19 மற்றும் 17 வயது சகோதரிகள் பள்ளிக்கு சென்று வந்து உள்ளனர். அவர்களில் இளைய சகோதரி சைக்கிளில் சென்றபோது, அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.
இதுபற்றி தனது சகோதரியிடம் அந்த மாணவி கூறியுள்ளார். விஜய் சர்காதே (வயது 19) என்ற அந்த நபரை எதிர்கொண்டு, தண்டிப்பது என இருவரும் முடிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, இளைய சகோதரி வழக்கம்போல் தனது சைக்கிளில் சென்று கொண்டு இருந்து உள்ளார். அப்போது சர்காதே, பள்ளி மாணவியை வழிமறித்து கையை பிடித்து, பரிசு ஒன்றை கொடுக்க முயன்று உள்ளார்.
அதனை வாங்க மாணவி மறுத்ததும், அந்த பரிசு பொருளை மாணவியின் பையில் வைத்ததுடன், வலுகட்டாயத்துடன் முத்தம் கொடுக்க மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்ய சர்காதே முயன்று உள்ளார்.
இதனால் வீடு திரும்பிய மாணவி தனது தாயாரிடம் சம்பவம் பற்றி கூறி அழுது உள்ளார். ஆத்திரமடைந்த அந்த தாயார், நீதி கிடைக்க வேண்டும் என நினைத்து, அந்த நபருக்கு தக்க பாடம் புகட்டும்படி தனது மகள்களிடம் கூறி உள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை இளைய சகோதரி சென்றபோது, சர்காதே அவரை மீண்டும் வழிமறித்து உள்ளார். கையை பிடித்து இழுத்து உள்ளார். இதற்காகவே பக்கத்தில் மறைவாக காத்திருந்த மூத்த சகோதரி உடனே முன்னே வந்து உள்ளார். இருவரும் சர்காதேவை அடித்து, துவம்சம் செய்து உள்ளனர். பெல்டாலும் அந்நபர் அடித்து தாக்கப்பட்டார். இதனால், அந்த நபர் முகம் தெரியாதபடி மறைத்து கொண்டு, தரையில் படுத்து கொண்டார். அந்த வழியே சென்ற சக மாணவிகள் மற்றும் வழிபோக்கர்களும், இந்த தகவலை தெரிந்து கொண்டு சர்காதேவை அடித்து உள்ளனர். அந்த மாணவிகளின் தாயார் உடனடியாக சர்காதேவுக்கு எதிராக போலீசில் புகார் அளித்து உள்ளார். இதுபற்றி காக்தாபீத் காவல் துறையினர் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மாணவியை பின்தொடருதல் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
NEWS EDITOR : RP