சில காலமாக தமிழ்நாட்டில் கடன் செயலிகள் மூலம் பலரும் ஏமாற்றப்படும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தாங்கள் வாங்கிய பணத்திற்கு அதிகமான தொகை செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் பணத்தை செலுத்தாததால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கடன் வாங்கியது குறித்து தெரிவிப்பதாலும் சிலர் விபரீதமான முடிவுகளை எடுக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது.
இது போன்ற கடன் செயலி மோசடிகளை தடுப்பது குறித்து காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது “கடன் செயலி மோசடி என்பது பிரபலமானது. இளைஞர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கடன் வாங்கலாம் என கடன் செயலியை பதிவிறக்கம் செய்கிறார்கள். இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் போது குடும்ப தகவல்கள் மற்றும் தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் புகைப்பட கேலரியை பயன்படுத்த அனுமதி கேட்கிறார்கள்.
இந்த பணம் முழுவதையும் கட்டி முடித்த பிறகு கூடுதலாக மேலும் பல ஆயிரம் பணம் கட்ட சொல்வார்கள். நீங்கள் அந்த பணத்தை கட்ட மறுத்தால் உங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்று கூறுவார்கள். மேலும் உங்கள் கேலரியில் உள்ள புகைப்படங்களை மார்ஃபிங் செய்து நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்புவார்கள்.
உங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்துவார்கள். இந்த செயலிகளால் பணத்தை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே கடன் செயலியை பதிவிறக்கம் செய்யாதீர்கள். கந்து வட்டி, மீட்டர் வட்டி போல கடன் செயலி மூலமாகவும் உங்களை ஏமாற்றிவிடுவார்கள். சைபர் குற்றம் குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.” இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
NEWS EDITOR : RP