பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த ஜூன் 1ம் தேதி மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசிய காணொளித் தொகுப்பு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ் மாமன்னன்’ படம் உருவாவதற்கு காரணம் ‘தேவர் மகன்’ படம்தான். ’தேவர் மகன்’ படம் பார்த்தபோது எனக்கு நிறைய வலி, மனப்பிறழ்வு , பாசிட்டிவ் , நெகட்டிவ் என அனைத்து உணர்வுகளுமே ஏற்பட்டன. படம் பார்த்த பின்னர் அந்த நாளை என்னால் கடந்து போகமுடியவில்லை. ‘தேவர் மகன்’ எனக்கு மிகப்பெரிய மனப்பிறழ்வை உண்டாக்கிய படம். இந்த படத்தை எப்படி புரிந்துகொள்வது என்பதே எனக்கு தெரியவில்லை. ‘தேவர் மகன்’ உலகில் பெரிய தேவர் இருக்கிறார், சின்ன தேவர் இருக்கிறார். ஆனால அந்த உலகில் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன்.. ? அப்படி முடிவு செய்து எடுத்த படம்தான் ‘மாமன்னன்’.
நான் ‘பரியேறும் பெருமாள்’ படம் எடுக்கும்போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுதான் எடுத்தேன். ‘கர்ணன்’ படம் எடுக்கும் போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். ’மாமன்னன்’ படம் எடுக்கும் போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். தேவர் மகன் படத்தில் வடிவேலு நடித்த அந்த இசக்கி கதாபாத்திரம்தான் ‘மாமன்னன்’. அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படம்” என மாரி செல்வராஜ் பேசியிருந்தார்.நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் முன்வைத்த இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி கலவையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
தேவர் மகன் படத்தில் நடித்த இசக்கி என்ற கதாபாத்திரம் தற்போது இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் மாமன்னன் படத்தின் கதை. இரண்டு படமும் வெவ்வேறு கதைக்களங்கள் கொண்டவை. தேவர் மகன் படம் சாதி பெருமை பேசும் படம் அல்ல. அது ஒரு பங்காளி சண்டையை விவரிக்கும் படம். மாமன்னன் படத்தில் சாதிக்கு எதிரான சமூக நீதியை வலியுறுத்தும் கருத்து பேசியுள்ளோம்.” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP