2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. மக்களவை தேர்தலில் பாஜக-வை வீழ்த்த முக்கிய ஆலோசனை நடத்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டினார். பாட்னாவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 17 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, முதலமைச்சர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:
எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் சித்தாந்தத்தை காக்க ஒன்றாக செயல்படுவதில் உறுதியாக இருக்கிறோம். அதோடு எதிர்கட்சிகளின் ஒற்றுமைக்கான செயல்முறைகள் அடுத்தடுத்த கட்டத்திற்கு தொடர்ந்து எடுத்துச்செல்லப்படும். மேலும் இன்று இந்தியாவின் அஸ்திவாரம் தாக்கப்பட்டு வருகிறது, தேசிய நிறுவனங்கள் மீதும், மக்களின் குரல் மீதும் பாஜக தாக்குதல் நடத்துகிறது. இதனை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.
NEWS EDITOR : RP