மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.
இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5 கோடியே 97 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக மத்திய அரசின் தரவுகள் கூறுகின்றன.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலூர் ஊராட்சியில் ஜெயக்குமார் என்பவர் மாவட்ட குறைத்தீர் அலுவலகத்தில் தங்களது கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முறைகேடு நடந்திருப்பதாக புகார் அளித்தார்.
இதுகுறித்து மேலூர் ஊராட்சிக்கு சென்று ஆய்வு செய்த மாவட்ட குறைதீர் அலுவலர் பல முறைகேடுகளை கண்டறிந்தார். ஆய்வின் இறுதியில் வேலைத்திட்டத்தில் ஈடுபடாத 15 பேரின் வங்கி கணக்கில் ஊதியம் செலுத்தப்பட்டிருப்பதும், அதில் ஒருவர் இறந்த நிலையில் வேறொருவரது வங்கி கணக்கிற்கு ஊதியம் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நூதன முறைகேட்டில் இதுவரை ரூ.4.59,000 செலுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியருக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறையாக கடிதம் அனுப்பட்டிருக்கிறது. ஜெயக்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொடுத்த மனுவின் பெயரில் கிடைத்த தகவல்கள் ஊழல் நடைபெற்றிருப்பதை மேலும் உறுதிசெய்கின்றன.
இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள், அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட திட்ட அலுவலர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
NEWS EDITOR : RP