நடிகர் ஜெயம் ரவி சினிமாவில் இருபது வருடங்களை நிறைவு செய்துள்ளார். அவரது முதல் படமான ஜெயம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி வெற்றியால் பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். தனி ஒருவன் இன்னொரு மைல்கல் படமாக அமைந்தது.
பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இறைவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சைரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்கள் கைவசம் உள்ளன.
சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி ஜெயம்ரவி டுவிட்டரில் நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், “திரையுலக வாழ்க்கையில் முக்கியமான இந்த மைல் கல்லை அடைந்து இருப்பதை அளவில்லாத நன்றி உணர்வுகளோடு கொண்டாடுகிறேன்.
என்மீது அன்பு வைத்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயம் படத்தில் இருந்து பொன்னியின் செல்வன் படம் வரை என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் அளித்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கும் எனது 20 ஆண்டுகால பயணத்தில் அங்கமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
NEWS EDITOR : RP