புனே, மராட்டியத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ளது. மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ளார்.
மராட்டியத்தில் ஆளுங்கட்சியாக இருந்த, சிவ சேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தனியாக பிரிந்தது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த நிலையில், சிவ சேனாவில் இருந்து ஷிண்டே பிரிந்ததன் தொடர்ச்சியாக, முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது.
இந்நிலையில், மராட்டிய கல்வி மந்திரியான தீபக் கேசர்கர் இன்று கூறும்போது, உத்தவ் தாக்கரே பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி வைக்க விரும்பினார். ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையும் வைத்திருந்தார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதல்-மந்திரியாக வேண்டும் என்பதே அவரது விருப்பம் என கேசகர்கர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், அவுரங்கசீப் மீது உத்தவ் தாக்கரேவின் புதிய அன்பு வெளிப்பட்டு உள்ளது. இந்துத்துவாவுடன் சமரசம் செய்து கொள்ளும் யாரும், சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். மும்பை நகரின் மாஹிம் நகரில் நேற்றிரவு வைக்கப்பட்டு இருந்த போஸ்டர் ஒன்றில், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியான உத்தவ் தாக்கரே மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கார் ஆகியோர் அவுரங்கசீப் உடன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் காணப்பட்டன. இதனை யார் வைத்தது? என்ற தகவல் வெளிவரவில்லை. பின்னர் அது நீக்கப்பட்டு விட்டது. புகார் எதுவும் வராத நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்வார்கள் என மும்பை போலீசார் கூறியுள்ளனர்.
NEWS EDITOR : RP