பருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு..!!

Spread the love

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டு உள்ளார். சென்னை தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், தற்போது பெய்த மழையினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

கூட்டத்தில், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி கே.என்.நேரு பேசியதாவது:- தற்போது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முழுமையாக முடிக்க வேண்டும். மழைநீர் வடிகால்களில் படிந்துள்ள மண் துகள்களை முழுமையாக அகற்றவேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளிலும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களிலும் ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு முடிக்க வேண்டும்.

அனைத்து மோட்டார் பம்புகள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும். மழை காரணமாக எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்காதவகையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் தொடர் கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகால் அமைக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமையிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுவதை கே.என். நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பல ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் 17 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்த காரணத்தினால், மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக கத்திபாரா சந்திப்பிலும், ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியின் காரணமாக கணேசபுரம் சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கியது. இது, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டது. மற்ற அனைத்து இடங்களும் உடனடியாக இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. மழைநீர் தேங்கிய இடங்களில் தண்ணீர் நிற்காமல் செல்வதற்கான வழிவகைகள், அங்கு மோட்டார் பம்புகள், வாகனங்கள் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருத்தல், பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீர்செய்தல், முடிக்கப்படாமல் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் சாலை பணிகள் ஆகியவற்றை உடனடியாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் போன்ற பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. மழைக்காலத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் சார்பில் அனைவரும் சிறப்பாக பணி புரிந்துள்ளனர். கணேசபுரம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் நிரந்தர தீர்வு காணும் வகையில் ரெயில்வே துறையிடம் அனுமதி பெறப்பட்டு இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே, மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தையும் 2 மாத காலத்துக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மழைநீரை வெளியேற்ற தேவையான அளவு மோட்டார் பம்புகள் தயார்நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கமிஷனர் (பொ) ஜி.எஸ்.சமீரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார், துணை கமிஷனர்கள் விஷு மஹாஜன் (வருவாய் மற்றும் நிதி), ஷரண்யா அறி (கல்வி), எம்.பி.அமித் (தெற்கு வட்டாரம்), எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் (மத்திய வட்டாரம்), எம்.சிவகுரு பிரபாகரன் (வடக்கு வட்டாரம்), தலைமை பொறியாளர்கள், மண்டல அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram