திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனரக விதை ஆய்வு இணை இயக்குனர் அவ்வை மீனாட்சி, விதை ஆய்வாளர் (தொழில்நுட்பம்) செல்வகுமார் ஆகியோர் வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிமம் வழங்கும் பதிவேடு, கோப்புகளை பார்வையிட்டு சரிபார்த்தனர்.
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வெம்பாக்கம் வட்டாரத்தில் விதை விற்பனை நிலையங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். செய்யாறு அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை இருப்பு, உளுத்து முளைப்பு திறன் குறித்தும் பதிவேட்டினை இணை இயக்குனர் பார்வையிட்டார்.
இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துறையின் விதை ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வந்தனர். அவர்களுடன் இணை இயக்குனரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். 35 விதை விற்பனை நிலையங்களில் மேற்கொண்ட ஆய்வில் 67 விதை மாதிரிகளில் முளைப்பு திறன் உறுதி செய்ய பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஆய்வில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட சுமார் 17 டன் அடங்கிய ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து 515 மதிப்பிலான விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
NEWS EDITOR : RP